42 ஆண்டுகளாகத் தேடப்படும் சுகுமார குரூப் உயிருடன் இருக்கிறாரா? - விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு!
தலைமறைவான குற்றவாளி சுகுமார குரூப் உயிருடன் இருக்கிறாரா எனக் கண்டறிய கேரள அரசு உத்தரவு...
42 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வரும் கொலைக் குற்றவாளி சுகுமார குரூப் உயிருடன் இருக்கிறாரா என்பதைக் கண்டறிய கேரள காவல் துறைக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.
கேரளத்தின் மவேலிக்கரை பகுதியில், கடந்த 1984 ஆம் ஆண்டு தனது சொந்த மரணத்தைப் போலியாகச் சித்தரித்து ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக சாக்கோ என்பவரை சுகுமார குரூப் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
இந்த நிலையில், 42 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வரும் சுகுமார குரூப் தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவர் புரூனே நாட்டில் வேறொரு பெயரில் வாழ்ந்து வருவதாகவும், சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகி வைரலாகின. மேலும், சுகுமார குரூப் இன்றளவும் கேரளத்தில் உள்ள தனது உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ள நிலையில், சுகுமார குரூப் உயிருடன் இருப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இன்று (ஆக. 28) அறிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்குத் தற்போது குற்றப்பிரிவு காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள நான் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கேரள காவல் துறையினர் சர்வதேச காவல் துறை அதிகாரிகளைத் தொடர்புக்கொண்டு இதுபற்றிய உண்மைகளைக் கண்டறிய வேண்டும். தற்போதைக்கு நம்மிடையே உள்ள தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, பலமுறை சுகுமார குரூப்பை பிடிக்க காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்தக் கொலையை மையமாகக் கொண்டு நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் “குரூப்” எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Kerala Home Minister Ramesh Chennithala has ordered the state police to ascertain whether Sukumara Kurup is still alive.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.