முஸ்லிம்களை சுட குறிவைக்கும் முதல்வர்: அசாம் பாஜக பகிர்ந்த விடியோவுக்கு குவியும் கண்டனங்கள்!
சிறுபான்மையினரை அழிக்கும் நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கண்டனம்...
முஸ்லிம்களை துப்பாக்கியால் சுடுவதற்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா குறிவைப்பதைப்போல அம்மாநில பாஜக பகிர்ந்த செய்யறிவு (ஏஐ) விடியோவுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
வங்கதேசத்திற்கு மன்னிப்பு இல்லை என்றும், வெளிநாட்டினர் இல்லாத அசாம் எனவும் குறிப்பிட்டு இந்த விடியோவை அசாம் பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
பின்னர் அந்த விடியோவை நீக்கிவிட்டு அதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டும் அம்மாநில பாஜக பகிர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
அசாம் பாஜக பகிர்ந்திருந்த விடியோவில், முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா இருவரைக் குறிவைப்பதைப் போன்று இருந்தது. அவர்கள் இருவரும் தொப்பி மற்றும் தாடியுடன் இருந்தனர்.
அந்த விடியோவில் வெளிநாட்டினர் இல்லாத அசாம். இனி, இரக்கம் இல்லை. ஏன் நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை? வங்கதேசத்தினருக்கு மன்னிப்பு இல்லை என்பன போன்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த விடியோவுக்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து அந்த விடியோவை அசாம் மாநில பாஜக நீக்கியுள்ளது.
பாஜக பகிர்ந்த விடியோவுக்கு கண்டனம் தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., சகாரிகா கோஷ், இது மிகவும் வெட்கக்கேடான செயல் எனக் குறிப்பிட்டார்.
இந்த விடியோவை உருவாக்கியவர் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
சிறுபான்மையினரை அழிக்கும் நோக்கத்தில் பாஜக இதனைப் பகிர்ந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இது இனப்படுகொலைக்கான அழைப்பு. பல ஆண்டுகளாக பாஜகவின் கனவாக இது இருந்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Assam BJP shares AI video of CM Himanta aiming rifle at Muslims
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.