பாகிஸ்தானில் காங். தலைவருக்கு பயிற்சியா? 10 நாள்களுக்கான பயண காரணம்? பாஜக கேள்வி
கெளரவ் கோகோயின் 10 நாள்கள் பாகிஸ்தான் பயணம் குறித்து பாஜக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது குறித்து...
கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் கெளரவ் கோகோய் பாகிஸ்தானில் 10 நாள்கள் தங்கியிருந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும் அசாம் முதல்வருமான ஹிமந்த விஸ்வ சர்மா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானால் வழங்கப்பட்ட விசாவில் கோகோயின் பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாள்களுக்கான பாகிஸ்தான் பயண விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது அசாம் மாநில காங்கிரஸ் தலைவராகவும் நாடாளுமன்ற காங்கிரஸ் துணைத் தலைவராகவும் உள்ள கெளரவ் கோகோய், கடந்த 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் பயணம் குறித்தும் அவரின் பிரிட்டன் மனைவி எலிசபெத் கோல்பெர்ன் கோகோய் அப்போது பாகிஸ்தானில் உள்ள காலநிலை கண்காணிப்பு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தது தொடர்பாகவும் பாஜக தற்போது கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஹிமந்த விஸ்வ சர்மா பேசியதாவது:
''2013 டிசம்பர் 14 முதல் 24 வரையிலான 10 நாள்கள் அவர் (கெளரவ் கோகோய்) பாகிஸ்தானில் இருந்தார். பாகிஸ்தான் சுற்றுலா தளங்களை உள்ளடக்கிய நாடு அல்ல. பாகிஸ்தான் சென்றதற்கான காரணம் குறித்து கேட்டபோது, தனது மனைவியை சந்திக்கச் சென்றதாக கோகோய் கூறினார். அட்டாரி எல்லை வழியாகவே பாகிஸ்தானுக்கு இவர் சென்றுள்ளார். இவரின் தந்தை தருண் கோகோய் அசாம் முதல்வராக இருந்தார். ஆனால், இவரின் இந்தப் பயணம் குறித்து அசாம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை'' எனக் குற்றம் சாட்டினார்.
'' பாகிஸ்தானின் லாகூருக்கு விசா அளிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், டிசம்பர் 16 ஆம் தேதி, அதாவது அவர் பாகிஸ்தான் சென்ற ஒரு நாளுக்குப் பிறகு இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி செல்லவும் விசா அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை குறிப்பிட்டது.
இது தொடர்பாக மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். லாகூரில் அவர் யார் யாரையெல்லாம் சந்தித்தார் என்பதையும் பாகிஸ்தான் ஏன் சிவப்பு கம்பளம் விரித்தது என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.
லாகூரில் இருந்து அவர் கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு 10 நாள்களாக அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்குமோ? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.
இஸ்லாமாபாத்திற்கும் கராச்சிக்கும் செல்ல விசா விண்ணப்பித்திருந்தாரா? அவரை அங்கு அழைத்துச் சென்றது யார்? இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் கோகோய் பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால், நாடாளுமன்றத்தில் கோகோய் எழுப்பும் கேள்விகளை நாங்கள் சந்தேகிக்க நேரிடும்'' எனக் பேசினார்.
உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும், லடாக்கில் சீன எல்லை ஆக்கிரமிப்பு குறித்தும் மக்களவையில் கெளரவ் கோகோய் தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
Himanta Biswa Sarma sharpens attack on Gaurav Gogoi over Pakistan visit
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.