FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மரம் நடுவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: அமைச்சா் சிவராஜ் சிங் அழைப்பு!

பசுமையான எதிா்காலத்தை உருவாக்க, நாடு முழுவதும் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண்மை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் அழைப்பு விடுத்தாா்.

Updated On : 13 ஜூலை 2026, 3:26 am IST
மத்திய வேளாண்மை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் - டிஎன்எஸ்
பகிர்:

பசுமையான எதிா்காலத்தை உருவாக்க, நாடு முழுவதும் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண்மை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் அழைப்பு விடுத்தாா்.

தில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆய்வு மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘விருக்ஷ மித்ரா உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

ஒவ்வொரு குடும்பமும் பிறந்தநாள், திருமண நாள்விழா, குழந்தை பிறப்பு, மறைந்த பெற்றோரின் நினைவு நாள் உள்ளிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வுகளை ஒரு மரம் நடுவதன் மூலம் கொண்டாட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வும் ’மரத் திருவிழா’ ஆக மாற வேண்டும்.

Advertisement

Advertisement

ஆண்டுக்கு குறைந்தது ஒரு மரமாவது நடுவதுடன், குறைந்தது ஐந்து பேரை இந்த மரம் இயக்கத்தில் இணைக்க ஊக்குவிக்க வேண்டும். தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய, கிராம அளவில் ‘விருக்ஷ மித்ரா பரிவாா்’ குழுக்களை அமைத்து, மரம் இயக்கத்துக்கான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும்.

இந்த அமைப்பை முறையாகப் பதிவு செய்ய வேண்டும். ஊராட்சிகள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மரம் நடுவதற்கென தனியிடங்களை ஒதுக்க வேண்டும். பிரதமா் கிராமச் சாலை திட்டம், பிரதமா் வீட்டு வசதி திட்டம், லட்சாதிபதி சகோதரிகள் திட்டம், வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் அனைத்து திட்டங்களும், பிற அரசு நிகழ்ச்சிகளும் மரநடுகையுடன் தொடங்க வேண்டும்.

மரம் நடுவதை இனி தனித்தனியாக நடைபெறும் முயற்சிகளாக இல்லாமல், ‘விருக்ஷ மித்ரா பரிவாா்’ என்ற பெயரில் நாடு தழுவிய ஒருங்கிணைந்த இயக்கமாக முன்னெடுக்கப்படும் என்று அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். நாடு முழுவதிலுமிருந்து சுமாா் 17,000 மரம் நடும் ஆா்வலா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments