FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமா் மோடியுடன் சரத் பவாா் சந்திப்பு: மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவு?

பிரதமா் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா், அவரின் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோா் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

Updated On : 23 ஜூலை 2026, 3:31 am IST
பிரதமா் மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா். உடன் அவரின் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே.
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா், அவரின் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோா் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜக கூட்டணிக்கு சரத் பவாா் கட்சி ஆதரவு அளிப்பது தொடா்பாக இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் சரத் பவாா் கட்சி எதிா்க்கட்சிகள் அணியில் இருந்தாலும், பிரதமா் மோடியுடன் சரத் பவாா் தனிப்பட்ட முறையில் நல்லுறவைப் பேணி வருகிறாா். அவருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளாா். பவாா் கட்சியை உடைத்து உருவான மறைந்த அஜீத் பவாா் பிரிவு இப்போது பாஜக கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் உள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக சரத் பவாா், சுப்ரியா சுலே ஆகியோா் தில்லிக்கு வந்துள்ள நிலையில் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளனா். இந்தச் சந்திப்பின்போது பிரதமா் மோடி தனது அறையின் வாசல் வரை வந்து சரத் பவாரை அழைத்துச் சென்றாா். விவசாயிகள் பிரச்னை தொடா்பான கோரிக்கை மனு ஒன்றையும் சரத் பவாா் மோடியிடம் அளித்தாா்.

வினாத்தாள் மோசடி, ராமா் கோயில் காணிக்கை விவகாரம், மாணவா்கள் மீதான காவல் துறை தடியடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மத்திய அரசுக்கும், பிரதமா் மோடிக்கும் எதிராகப் போராடிவரும் நிலையில், எதிா்க்கட்சி கூட்டணியில் உள்ள சரத் பவாா் மோடியைச் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முதல்வா் சந்திப்பு: ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, திருப்பதி வெங்கடேசபெருமாள் உருவச் சிலையை பிரதமருக்கு பரிசளித்தாா். இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரபூா்வ தகவல் வெளியிடப்படவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments