உண்ணாவிரதத்தைக் கைவிட்ட சோனம் வாங்சுக்! மத்திய அமைச்சர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் சந்தித்துப் பேசியது பற்றி...
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதத்தைக் முடித்துக்கொண்டுள்ள நிலையில், மருத்துவமனையில் சோனம் வாங்சுக் - மத்திய அமைச்சர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 முதல் தீவிர போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை 20 முதல் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் விரிவடைந்து வருகிறது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்!
Advertisement
Advertisement
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், தில்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து, சிஜேபி இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகி வந்தது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட பலர் வலியுறுத்தியும் அவர் தனது போராட்டத்தைக் கைவிடவில்லை.
இறுதியாக கடந்த ஜூலை 18 ஆம் தேதி அவர் உண்ணாவிரதம் இருந்து 21 நாள்கள் ஆன நிலையில், காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கும் சோனம், தனது உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. தொடர்ந்து தில்லி உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், சாப்பிடாமல் மறுத்து வந்தார்.
ஒரு பக்கம் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைய, மறுபக்கம் சோனம் வாங்சுக்கின் நிலைமை மோசமடைய நேற்று (ஜூலை 23) இரவு குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சோனமைச் சந்தித்தனர். அவர்கள் இணைந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்த நிலையில் அமைச்சர்களின் முன்னிலையிலேயே சோனம் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். கடந்த 26 நாள்களாக அவர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் நேற்று முடிவுக்கு வந்தது.
எழுத்துப்பூர்வ உத்தரவாதம்
"மத்திய அமைச்சர்கள் அளித்த எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தில், கடந்த ஜூலை 20 ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான தீர்வுகளுக்கு நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்களை நடத்த அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது.
மேலும், சமீபத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களால் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோனம் வாங்சுக் - மத்திய அமைச்சர்கள் பேசியது என்ன?
சோனமை சந்திப்பதற்கு முன்னதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் சுமார் 4 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிட, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அவரது கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக முடிவெடுத்து அமைச்சர்கள் அவரைச் சந்தித்துள்ளனர்.
மேலும் இதற்காக, டாக்டர் ஜிதேந்திர சிங், வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோவிடம் பேசியுள்ளார். தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும், சோனம் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட அவரிடம் பேசுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார். அதன்பின்னரே மத்திய அமைச்சர்கள் - சோனம் இடையே சநதிப்பு நடந்திருக்கிறது.
அதேபோல சிஜேபி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் சோனமிடம் மத்திய அமைச்சர்கள் வாய்வழி உறுதிமொழி அளித்துள்ளனர். அதன்படியே இன்று ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு நடக்கிறது.
ஜெ.பி. நட்டாவின் இல்லத்தில் அல்லது அவரது அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில் பொதுவான இடத்தில்தான் பேச வேண்டும் என்று சிஜேபி கூறியுள்ளது. அதன்படி இன்று இந்திய போட்டி ஆணையத்தில் (Competition Commission of India) பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) கீழ் தேர்வு முறைகேடுகளைக் குறைக்க, ஒரு புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்றும் சோனமிடம் அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். அதன்படியே இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும், வினாத்தாள் கசிவைத் தடுக்க 'பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைத் தடுப்புச்) சட்டம், 2024-ல் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சோனம் தனது அன்றாட நடைமுறைகளைப் பின்பற்றி விரைவில் தனது உடல் எடையை மீட்டெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வதக்கவும் பதிவிட்டுள்ளார்.
மாணவர்களின் கோரிக்கைகள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு வீடியோ வெளியிட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், தீவிர போராட்டத்தின் மூலமாக சோனம் மற்றும் சிஜேபியினரின் குறிப்பிடத்தக்க வெற்றி என்றே கூறப்படுகிறது.
சோனம் மருத்துவமனையில் இருந்து விரைவாக தனது சொந்த இடமான லடாக் செல்ல வேண்டும் என்றும் லடாக் செல்வதற்கு முன்பாக மாணவர்கள், இளைஞர்களைச் சந்தித்து பேச வேண்டும் என்றும் அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.
சோனம் எக்ஸ் பக்க பதிவு..
"மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, ஜிதேந்திர சிங், லே லடாக் அமைப்பினர் என்னுடைய உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு 65 எம்.பி.க்கள் இணைந்து கையெழுத்திட்டு எனக்கு அளித்தும் நான் விடவில்லை. நிபந்தனைகள் பற்றிய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் நாட்டில் வன்முறை நிகழ வாய்ப்புள்ளதாலும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளேன். நிபந்தனைகள் குறித்து விரிவாக மற்றொரு வீடியோவில் சொல்கிறேன். எந்த வன்முறைக்கும் இடம்கொடுக்கமால் இளைஞர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சோனம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதற்கு சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இன்று ஜெ.பி. நட்டாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது குறித்து நாளை (ஜூலை 25) நண்பகல் வரை மத்திய அரசு கால அவகாசம் கோரியுள்ளதாக சிஜேபி தெரிவித்துள்ளது.
உண்ணாவிரதத்தை வாங்சுக் கைவிட்டபோதிலும் இளைஞர்களின் போராட்டம் தலைநகர் மட்டுமின்றி நாட்டின் மற்ற பகுதிகளிலும் தீவிரமடைந்துகொண்டிருக்கிறது. அடுத்தது என்ன? சட்டத் திருத்தம் மட்டும்தானா? தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவா? அல்லது போராட்டமும் தொடர்ந்து, அரசு அடக்குமுறையும் தொடருமா? என்ன செய்யப் போகிறது, மத்தியிலுள்ள பாஜக அரசு?
Sonam Wangchuk calls off hunger strike; What happened during the meeting with Union Ministers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.