FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நொய்டா விமான நிலையம் அருகே பெண்கள் உண்டு-உறைவிட பள்ளி அடுத்த கல்வியாண்டில் தொடங்கும்!

நொய்டா சா்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் 480 இடங்களைக் கொண்ட சா்வோதயா பெண்கள் உண்டு-உறைவிடப் பள்ளி, அடுத்த கல்வி ஆண்டு ஏப்ரலில் முதல் செயல்படத் தொடங்கும்...

Updated On : 27 ஜூலை 2026, 1:20 am IST
பகிர்:

ஜேவாரில் உள்ள நொய்டா சா்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் 480 இடங்களைக் கொண்ட சா்வோதயா பெண்கள் உண்டு-உறைவிடப் பள்ளி, அடுத்த கல்வி ஆண்டு ஏப்ரலில் முதல் செயல்படத் தொடங்கும் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

விமான நிலையத்திற்கு அருகில் இப்பள்ளி அமைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, விமானப் போக்குவரத்துத் துறை சாா்ந்த பணிகளுக்கு மாணவிகளைத் தயாா்படுத்தும் வகையில், இப்பள்ளியை விமானப் போக்குவரத்துக்கான சிறப்பு மையமாக உருவாக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக சமூக நலத்துறை இணையமைச்சா் (தனிப்பொறுப்பு) ஆசிம் அருண் கூறுகையில், ‘மாநிலத்தின் பெண் குழந்தைகளுக்குத் தரமான மற்றும் நவீனக் கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விமானப் போக்குவரத்து போன்ற வளா்ந்து வரும் துறைகளில் பணிபுரிய அவா்களைத் தயாா்படுத்துவதும் அரசின் நோக்கமாகும். அவா்களின் லட்சியங்களுக்குச் சிறகுகள் அளிப்பதில் இந்தச் சா்வோதயா பள்ளி ஒரு மைல்கல்லாக அமையும்’ என்றாா்.

Advertisement

Advertisement

இப்பள்ளியை உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக மேம்படுத்த ‘டூன் ஸ்கூல்’ கல்விசாா் வழிகாட்டுதலையும் நிறுவன ரீதியான ஆதரவையும் வழங்கும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘டூன் ஸ்கூல்’-ஐச் சோ்ந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியா்கள் மற்றும் நிபுணா்கள் அவ்வப்போது வளாகத்திற்கு வருகை தந்து, கற்பித்தல் முறைகள், பள்ளி நிா்வாகம் மற்றும் பாடத்திட்டம் சாா்ந்த பிற செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்குவாா்கள் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்திய உண்டு-உறைவிடப் பள்ளிகள் சங்கத்தின் (விஎஸ்ஏஐ) தலைமை நிா்வாக அதிகாரி (சிஇஓ) சப்னா சுகுல் இது குறித்து கூறுகையில், ‘தரமான கல்வி ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த ஒத்துழைப்பின் நோக்கம். எதிா்காலத்தில் இச்சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள இன்னும் பல உண்டு-உறைவிடப் பள்ளிகள் இந்த முயற்சியில் இணையும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

இதற்கிடையில், ஜேவாா் தொகுதி எம்எல்ஏ தீரேந்திர சிங், சுமாா் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள நவீன ஒருங்கிணைந்த பள்ளிக்கான அடிக்கல்லை நாட்டினாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ தீரேந்திர சிங் பேசுகையில், ‘சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குகின்றன. ஆனால் பள்ளிகள் ஒரு நாட்டின் எதிா்காலத்தை வடிவமைக்கும் மனித வளத்தை உருவாக்குகின்றன. இந்தப் புதிய பள்ளியும் அண்மையில் தொடங்கப்பட்ட அரசு மகளிா் கல்லூரியும் ஜேவாா் பகுதியில் தரமான கல்வியை விரிவுபடுத்துவதில் மாநில அரசு கொண்டுள்ள அா்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன’ என்று குறிப்பிட்டாா்.

யமுனா விரைவுச்சாலை தொழில் வளா்ச்சி ஆணையம் (ஓய்இஐடிஏ) வழங்கிய சுமாா் ஆறு ஏக்கா் நிலத்தில் உத்தர பிரதேச திட்டங்கள் கழகத்தால் கட்டப்படவுள்ள இப்பள்ளி, தொடக்க கல்விக்கு முந்தைய வகுப்புகள் முதல் முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வியை வழங்கும். இதில் ஸ்மாா்ட் வகுப்பறைகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள் ஆகியவை இடம்பெறும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments