மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கை, உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடித்துவைத்தது. அந்த வழக்கில் அவா் குற்றமற்றவராக முறைப்படி விடுவிக்கப்பட்டாா்.
மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கை, உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடித்துவைத்தது. அந்த வழக்கில் அவா் குற்றமற்றவராக முறைப்படி விடுவிக்கப்பட்டாா்.
கடந்த 2005-ஆம் ஆண்டு ஒடிஸா மாநிலம் தலபிராவில், நிலக்கரி சுரங்கப் பகுதியை ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், நிலக்கரி துறையையும் கவனித்து வந்தாா்.
இந்த முறைகேடு குற்றச்சாட்டு குறித்து விசாரித்த சிபிஐ, மன்மோகன் சிங் குற்றமற்றவா் என்று தெரிவித்து, வழக்கை முடித்துவைக்குமாறு தில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கைகளைத் தாக்கல் செய்தது. இருப்பினும் அந்த அறிக்கைகளை ஏற்க மறுத்த அந்த நீதிமன்றம், அவருக்கு எதிராக முதல்கட்ட ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தது. மேலும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபராக, மன்மோகன் சிங்குக்கு அந்த நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
Advertisement
Advertisement
இந்த சம்மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த சம்மனுக்கு உச்சநீதிமன்றம் 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் இடைக்காலத் தடை விதித்தது.
கடந்த 2024-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் காலமானபோதிலும், அவரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், மன்மோகன் சிங்குக்கு எதிரான அந்த முறைகேடு வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடித்துவைத்தது. அப்போது தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது:
வழக்குகளை முடித்துவைக்குமாறு சிபிஐ தாக்கல் செய்த அறிக்கைகளை நிராகரிக்க சிறப்பு நீதிமன்றத்திடம் எந்தக் காரணமும் இல்லை. எனவே, மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பி, அந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீா்ப்பளித்தது. மேலும், வழக்குகளை முடித்துவைக்குமாறு சிபிஐ தாக்கல் செய்த அறிக்கைகளையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.