கோமியம் நிபுணர்! ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் குறித்த பிரியங்கா காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு!
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி குறித்த பிரியங்கா காந்தியின் பேச்சுக்கு கல்வியாளர்கள் கண்டனம்...
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி குறித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தியின் விமர்சனத்துக்கு 200-க்கும் அதிகமான கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேர்வுச் சீர்திருத்தங்களுக்கான ஆறு பேர் கொண்ட குழுவின் உறுப்பினராக, பத்ம ஸ்ரீ விருது பெற்ற பேராசிரியரும் ஐஐடி மெட்ராஸ் இயக்குநருமான காமகோடி இடம்பெற்றுள்ளார்.
இதுபற்றி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) அன்று மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி,
Advertisement
Advertisement
“புதிய குழுக்கள் அமைப்பதில் பலன் கிடைக்காது என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும். ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளில் ஒன்று கூட இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அதேவேளையில், இந்தப் புதிய குழுவில் முன்னாள் ஐபி தலைவர், ஐடி நிறுவன உரிமையாளர் மற்றும் கோமியம் நிபுணரும் இடம்பெற்றுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பேராசிரியர் காமகோடி குறித்த பிரியங்கா காந்தியின் மறைமுக விமர்சனத்துக்குக் கண்டனம் தெரிவித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் உள்பட 215 கல்வியாளர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதுபற்றி, அந்தக் கடிதத்தில்,
“ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடியை கோமிய நிபுணர் என்று நீங்கள் (பிரியங்கா காந்தி) குறிப்பிட்டுள்ளது குறித்து எங்களின் அதிருப்தியைத் தெரிவிக்க இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். அந்தக் கருத்து கிண்டலாகவோ அல்லது அரசியல் சொல்லாடலாகவோ கூறப்பட்டிருந்தாலும், அத்தகைய சித்தரிப்பு கவலைகளை ஏற்படுத்துகின்றன.
கேலி கிண்டல் என்பது அர்த்தமுள்ள கலந்துரையாடலுக்கு மாற்றாக அமையாது” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் குறித்து, காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, பிரியங்கா காந்திக்கு எதிராக 200-க்கும் அதிகமான கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
முன்னதாக, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கடந்த 2025 ஆம் ஆண்டு பசு மாட்டின் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
More than 200 academicians have condemned senior Congress leader Priyanka Gandhi's criticism of IIT Madras Director V. Kamakoti.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.