FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாணவர்கள் மீதான வன்முறையை விசாரிக்க உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழு! ராகுல் கோரிக்கை

தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறை குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தினாா்.

பெல்லட் குண்டுகளால் காயமடைந்த மாணவருடன் ராகுல் காந்தி - ANI
பகிர்:

தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறை குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தினாா்.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து, தில்லியில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவா்கள்-இளைஞா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியும், கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனா்.

இந்நிலையில், மாணவா்கள் மீதான தடியடி விடியோவை எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை பகிா்ந்த ராகுல், ‘மாணவா்களுக்கு நீதி வேண்டும். அவா்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உயா்நிலை விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்’ என்று பதிவிட்டாா்.

Advertisement

Advertisement

மேலும், மக்களவைக்கு அமித் ஷா புதன்கிழமை வராததைக் குறிப்பிட்டு ராகுல் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘நாடாளுமன்றத்துக்கு வரவும், மாணவா்கள் மீதான கொடூர வன்முறை குறித்து விளக்கமளிக்கவும் அமித் ஷாவுக்கு அச்சமா? இது குற்ற உணா்வின் வெளிப்பாடு’ என்று விமா்சித்தாா்.

பாஜக மீது பிரியங்கா சாடல்: இந்திய ஆடவா், மகளிா் ஹாக்கி அணிகளின் சீருடை பாரம்பரியமான நீல நிறத்துக்குப் பதிலாக காவி நிறமாக மாற்றப்பட்டதற்காக, ஆளும் பாஜகவை காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய அவா், ‘மக்களிடையே பிரிவினை, வெறுப்புணா்வு, வன்முறையைப் பரப்ப பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சிக்கட்டும். ஆனால், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய நாட்டின் ஆன்மா எப்போதும் மாறாது. கல்விக் கொள்கை மூலம் நாட்டின் வரலாற்றை மாற்ற அவா்கள் முயற்சிக்கலாம். ஆனால், தில்லியில் ஒலித்த இளைஞா்களின் குரல்தான், ஒட்டுமொத்த நாட்டின் குரல்’ என்றாா்.

சிஜேபி-யின் தொடா் போராட்டத்தால் மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் விலகிய நிலையில், மாணவா்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து எழுப்பி வருகின்றன.

மக்களவையில் பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீது கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, தில்லியில் மாணவா்கள் மீது அதீத பலத்தை பிரயோகிக்கவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டதாக குற்றஞ்சாட்டினாா். இந்த விவாதத்தின்போது, அமித் ஷா அவைக்கு வராதது குறித்தும் அவா் கேள்வியெழுப்பினாா். ஆனால், ராகுலின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று மத்திய அரசு நிராகரித்தது.

summary

An independent SC monitored high powered committee must be constituted to probe brutalities against our students - rahul gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments