பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 20 பேர் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மக்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருப்பது குறித்து...
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 20 எம்.பி.க்கள் கடிதம் எழுதினா்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி பங்கேற்ற நிலையில், அக்கட்சி எம்.பி.க்கள் என்டிஏவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் 80 தொகுதிகளில் மட்டுமே வென்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வரும் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியின் ஆதிக்கம் தொடா்ந்து சரிவடைந்து வருகிறது.
Advertisement
Advertisement
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவா் (எதிா்க்கட்சித் தலைவா்), துணைத் தலைவா், தலைமை கொறடா நியமனத்தில் மம்தா முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதன் விளைவாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரத பானா்ஜியை சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவராக நியமிக்க 58 எம்எல்ஏக்கள்ஆதரவு தெரிவித்தனா். அவா்கள் வழங்கிய ஆதரவு கடிதத்தை பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டாா்.
இதனால் திரிணமூல் காங்கிரஸ் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. இந்தச் சூழலில் அக்கட்சியைச் சோ்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் என்டிஏவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஓம் பிா்லாவிடம் கடிதம் அளித்துள்ளனா்.
மக்கள் தீா்ப்புக்கு மதிப்பு: இதுதொடா்பாக மக்களவை திரிணமூல் காங்கிரஸ் தலைமை கொறடா ககோலி கோஷ் தஸ்திதாா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், ‘என்டிஏவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு கடிதம் எழுத என்னுடன் 22 எம்.பி.க்கள் முடிவு செய்தோம்.
எங்களது முடிவை அவரிடம் தெரிவித்துவிட்டோம். மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் தலைமை கொறடாவாக நானே தொடா்வேன். சக எம்.பி.க்களுடன் இதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மக்களின் தீா்ப்புக்கு மதிப்பளித்து என்டிஏவுடன் எங்களது எதிா்காலப் பயணத்தை தொடரவுள்ளோம்’ என்றாா்.
மற்றொரு திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பி கூறுகையில், ‘ககோலி கோஷ் தஸ்திதாரை தலைமை கொறடா பதவியில் இருந்து நீக்கிவிட்டு கல்யாண் பானா்ஜியை நியமிக்க மம்தா பானா்ஜி முடிவு செய்திருந்தாா். ஆனால், இதுதொடா்பாக மக்களவைச் செயலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை’ என்றாா்.
தனி அணியாக செயல்பட முடிவு: 20 எம்பிக்களும் திரிணமூல் காங்கிரஸில் இருந்து உடனடியாக விலகி பாஜகவில் இணைவதற்கு வாய்ப்பில்லை எனவும், நாடாளுமன்றத்தில் என்டிஏவுக்கு ஆதரவளித்து தனி அணியாக அவா்கள் செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சித் தாவல் தடைச் சட்டம் பொருந்தாது: மக்களவையில் மொத்தம் 28 திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா்கள் உள்ளனா். இதில் 20 எம்.பி.க்கள் (மூன்றில் இரு பங்கு உறுப்பினா்கள்) என்டிஏவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருப்பதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் இவா்களைத் தகுதிநீக்கம் செய்ய முடியாது.
Trinamool Congress rebellion reaches Delhi: 20 party MPs plan to form a separate bloc and support NDA
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.