FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

டிஆர்டிஓ-வின் 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி!

டிஆர்டிஓ-வின் பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புத் திறனை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து மூன்று ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறித்து...

Updated On : 13 ஜூன் 2026, 11:42 am IST
டிஆர்டிஓ-வின் 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி - டிஎன்எஸ்
பகிர்:

எதிரி நாடுகளின் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை அச்சுறுத்தல்களை முறியடிக்கும் நோக்கில், நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ), பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புத் திறனை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து மூன்று ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் சனிக்கிழமை(ஜூன் 13) இடைநிலைத் தூர பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு மேம்பட்ட இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது.

இந்த இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வளிமண்டலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள பகுதிகளில் 2 ஆயிரம் கி.மீ முதல் 5 ஆயிரம் கி.மீ தூரத்தில் உள்ள எதிரி நாடுகளின் ஏவுகணைகளை கண்டறிந்தும், பின்னர் அதனை செயலிழக்கச் செய்யும் வகையில் வடிவமைப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இந்த சோதனையில் இரண்டு ஏவுகணைகள் இலக்குகளை குறிவைத்து துல்லியமாக தாக்கி செயல்பட்டது. நீண்ட தூரம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அச்சுறுத்தல்களை விண்வெளியிலும், வளிமண்டலத்திலும் இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

அதேபோன்று கடலில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆற்றலை நிரூபிக்கும் வகையில், இந்த ஏவுகணைகள் கடற்படை தளத்தில் இருந்து முதன்முறையாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் கடல் மட்டத்திற்கு மிக அருகில் பறந்து சென்று எதிரிகளின் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்டது.

நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிரான பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் நடுத்தர தூரத்தில் கப்பல் எதிர்ப்புத் திறனை நிரூபிக்க, தொடர்ந்து மூன்று ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (டிஆர்டிஓ) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில், இந்த மகத்தான சாதனைகளை புரிந்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பையும், தற்சார்பு பாதுகாப்புத் திறனையும் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இந்தச் சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வரையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடுகளின் உயர்மட்டக் குழுவில் இந்தியாவை இணைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

பல்வேறு வகையான எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாடுகளின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தும் பல முக்கிய தொழில்நுட்பங்களை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக நிரூபித்துள்ளது என்று சிங் கூறியுள்ளார்.

பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புத் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதாகவும், இடைமறிக்கும் ஏவுகணைகள் தத்தமது இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், இந்த அமைப்புகள் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன என்றும், கடற்படை நடுத்தர தூரம் சென்று கப்பல்களைத் தாக்கும் புதிய எதிர்ப்பு ஏவுகணையின் முதல் சோதனையின் போது, நடுத்தர தூரத்தில் கப்பல் எதிர்ப்புப் பாதுகாப்பு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இது நாட்டின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

மேலும், டிஆர்டிஓ தலைவர் ராஜேஷ் குமார் சிங் பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்துறை கூட்டாளர்களின் ஒருங்கிணைந்த உழைப்புக்கு பாராட்டு தெரிவித்ததுடன், இந்த சோதனை மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகளைக்கூட நடுவானில் தடுத்து அழிக்கும் திறன் கொண்ட உலகில் மிகச் சில முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் தரை, வான் மற்றும் கடல்வழிப் பாதுகாப்பு திறன் பல மடங்கு வலுவடைந்துள்ளது.

summary

DRDO successfully conducts 3 consecutive flight-tests to demonstrate multi-layered ballistic missile defence capability...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments