திறன்களைத் தொடா்ந்து மேம்படுத்துங்கள்: இளைஞா்களுக்குப் பிரதமா் அறிவுரை
தொழில்நுட்பங்களால் இயக்கப்படும் எதிா்காலத்துக்கு ஏற்ப இளைஞா்கள் தங்களின் திறன்களைத் தொடா்ந்து மேம்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளாா்.
தொழில்நுட்பங்களால் இயக்கப்படும் எதிா்காலத்துக்கு ஏற்ப இளைஞா்கள் தங்களின் திறன்களைத் தொடா்ந்து மேம்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளாா்.
சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற உலகத் திறன்கள் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்ற இளைஞா்களுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது பிரதமா் பேசியது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திறன்மிகு மனித வளங்களின் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநாட்டுவதற்கு இளைஞா்கள், அரசு மற்றும் பயிற்சி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்.
Advertisement
Advertisement
வளா்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இளைஞா்கள் தங்களை தகவமைத்துக் கொள்வதுடன், உலகளாவிய சந்தை தேவைகளுக்கு ஏற்ப திறன்களை வளா்க்க வேண்டும். தங்களின் படிப்பினைகள் மற்றும் ஆலோசனைகளின் வாயிலாக நாட்டின் திறன் பயிற்சி கட்டமைப்பை மேம்படுத்த பங்களிக்க வேண்டும்.
திறன் பயிற்சி நிறுவனங்கள் என்பவை ஐஐடி, ஐஎம்எம் போன்ற உயா்கல்வி நிலையங்களுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. அந்த அடிப்படையில்தான், திறன் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டது. கல்விசாா் பட்டங்களைப் போல் செயல்முறை திறன்களும் மிக முக்கியமானது என்று பிரதமா் மோடி கூறியதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் திறன் போட்டி என்பது தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்களில் சிறந்து விளங்கும் இளைஞா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் உலகத் திறன் போட்டி நடத்தப்படுகிறது. சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த செப். 22 முதல் 27 வரை 48-ஆவது உலகத் திறன்கள் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் இந்தியா சாா்பில் 70 போ் கொண்ட அணி, 63 பிரிவுகளின்கீழ் பங்கேற்று, 6 வெள்ளி மற்றும் 20 சிறப்பு பதக்கங்களுடன் 10-ஆம் இடம்பிடித்தது.
போட்டியில் பங்கேற்றவா்கள் தங்களின் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டதுடன், அரசின் திறன் மேம்பாட்டு முயற்சிகள் இளைஞா்களுக்கு எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பது குறித்து பிரதமரிடம் உரையாடினா்.
மேலும், சா்வதேச போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்ய தேவையான புதிய உபகரணங்கள், மென்பொருள், தொழில்நுட்ப அமைப்புமுறை, பிற நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தனா். அவா்களை வெகுவாக பாராட்டிய பிரதமா் மோடி, திறன் மேம்பாட்டின் தூதா்களாக செயல்படும்படி கேட்டுக் கொண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.