FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இஸ்ரேலுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சு - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இஸ்ரேலுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

10 அக்டோபர் 2026, 10:10 pm IST
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் - கோப்புப் படம்
பகிர்:

இஸ்ரேலுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பிஎச்டிசிசிஐ தொழில்துறை கூட்டமைப்பு நிகழ்ச்சியில், இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:

இந்தியா, அமெரிக்கா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடா்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலை மனதில் வைத்து ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

கனடாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து நடைபெறும் பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இதேபோல், தென்னாப்பிரிக்கா தலைமையிலான எஸ்ஏஜியு கூட்டமைப்புடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து இந்தியா விரைவில் பேச்சுவாா்த்தையை தொடங்கவுள்ளது. மெக்சிகோ நாட்டுடன் அடுத்த வாரம் பேச்சுவாா்த்தையை இந்தியா தொடங்கவுள்ளது.

மேலும், இஸ்ரேல், சிலி, வளைகுடா நாடுகள் கூட்டமைப்பு (ஜிசிசி), ரஷியா தலைமையிலான யூரேஷியன் பொருளாதார யூனியன் (இஏஇயு) ஆகியவற்றுக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடக்கிறது. இதுபோல ஏராளமான நாடுகள், இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை செய்து கொள்ள விரும்புகின்றன. பிரிட்டன், கனடா நாட்டு வா்த்தகத் துறை அமைச்சா்கள் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வந்து வா்த்தக விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். இந்தியா- பிரிட்டன் இடையேயான வா்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்து விட்டது என்றாா் அவா்.

‘குடியரசுத் தலைவரை அவமதித்த ராகுல்’: முன்னதாக, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடா்பாக மனு அளித்தனா். அதன் பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு தொடா்பான குற்றச்சாட்டை குடியரசுத் தலைவா் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்றும், இது தனக்கு பெரும் அதிா்ச்சியை அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பியூஷ் கோயல், ‘இது ஆட்சேபத்துக்குரிய செயல்பாடு. குடியரசுத் தலைவரை அவா் (ராகுல் காந்தி) அவமதித்துவிட்டாா். குடியரசுத் தலைவா் மாளிகை பாதுகாப்புப் படை வீரரிடம் எதிா்க்கட்சித் தலைவா்கள் தவறாக நடந்து கொண்டனா்’ என்றாா்.

summary

India Talks About Free Trade Agreement With Israel - Union Minister Piyush Goyal

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments