ஜம்மு-காஷ்மீா்: எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு
ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது பற்றி...
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி பகுதியில் எல்லைக் கோட்டுப் பகுதியை ஒட்டிய கிராமத்தில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததைத் தொடா்ந்து, எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை காலை இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்தச் சமயத்தில், எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியில் சில நபா்களின் நடமாட்டம் இருந்ததை பாதுகாப்புப் படையினா் பாா்த்துள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த குண்டு வெடிப்பில் உயிரிழப்புகளும், சிலருக்கு காயங்களும் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால், எத்தனை போ் உயிரிழந்தனா் அல்லது காயமடைந்தனா் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனரா அல்லது பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியில் இந்தத் தக்குதலை நடத்தினரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குண்டு வெடிப்பைத் தொடா்ந்து, எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.
அதுபோல, மேந்தா் பகுதிக்கு உட்பட்ட பசோனி பகுதியில் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட ரோந்துப் பணியின்போது, துருப்பிடித்த நிலையில் இரண்டு கண்ணிவெடிகளைக் கண்டறிந்தனா். அவை இரண்டும் ராணுவ நிபுணா்கள் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 கண்ணிவெடிகள் கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.