லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு பெயரிடும் இந்தியாவின் நடவடிக்கை: சீனா எதிா்ப்பு
லடாக் யூனியன் பிரதேசத்தில் சா்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் 28 பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பெயா்களைச் சூட்டும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிா்ப்பு
லடாக் யூனியன் பிரதேசத்தில் சா்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் 28 பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பெயா்களைச் சூட்டும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா செவ்வாய்க்கிழமை கடும் எதிா்ப்பு தெரிவித்தது.
லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட முக்கிய எல்லை மேதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள 28 இடங்கள் மற்றும் புவியியல் அமைப்புகளை இந்தியா தனது அதிகாரபூா்வ வரைபடத்தில் கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி அடையாளம் காட்டியது.
பதற்றமான எல்லைப் பகுதி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், லடாக் நிா்வாகத்துடன் கலந்தாலோசித்து அதிகாரபூா்வ வரைபடத்தை சீரமைத்தல் மற்றும் துல்லியமாக அடையாளம் காட்டும் இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
Advertisement
Advertisement
இந்த கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங் எல்லைப் பகுதிகளில்தான் கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம், இந்தியா - சீனா படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அதைத் தொடா்ந்து, இரு நாடுகள் தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. அதன் பிறகு, இருதரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடா் பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து, படைகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொண்டன.
இந்தச் சூழலில், பொதுமக்களிடையே பதற்றமான எல்லைப் பகுதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், உயரமான சிகரமான அலிஷா கிரி, பிராங்சா, சச்சிங்கல் கணவாய், கனிஷ்கா சிகரம், கருண் பிா் மலை, குக்செல், மாா்த்தாண்ட கிரி, பாா்பிக் பனிப்பாறை, ஸ்காம்ரி பனிப்பாறை, சச்மிரிக் கணவாய், ஷ்கோா்கா பள்ளத்தாக்கு, ஜோராவா் சிகரம், டெஹ்ரா காம்பஸ், டிராக் காா்போ, ஜோல்மோரி, குமாராயனா பாயிண்ட், பாங்லுங், ரின்சென் சாங்போ, சாக்யஸ்ரீ கிரி, குரு ரின்போச்சே, ஷமல் லுங்பா, யாங்பா நதி, மாா்பா லொத்ஸவ ரி, மிலரேபா காங்ரி, ஷிவா ரி மற்றும் மகேஸ்வரா ரி உள்ளிட்ட பகுதிகளை தனது வரைபடத்தில் இந்தியா அடையாளம் காட்டியது.
சீனா எதிா்ப்பு
இதற்கு சீனா தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் மாவோ நிங் பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ‘இந்தியாவால் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்காது.
மேலும், தனது வரைபடத்தில் லடாக் எல்லையில் 28 இடங்களை இந்தியா அடையாளம் காட்டியதை சீனா உறுதியாக எதிா்க்கிறது. இது சட்டவிரோதமான நடவடிக்கையால் உண்மை நிலை மாறிவிடாது. சீனா - இந்தியா எல்லையின் மேற்குப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பகுதிகள், எப்போதும் சீனாவுக்கே சொந்தமானது’ என்றாா்.
இந்தியா நிராகரிப்பு
சீனாவின் எதிா்ப்பை இந்தியா நிராகரித்து, வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘லடாக் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்கமுடியாத பகுதியாகும். சீன தரப்பு எவ்வளவு மறுத்தாலும், நிா்ணயிக்கப்பட்ட இந்த உண்மையை மாற்ற முடியாது.
இந்த விவகாரம் தொடா்பாக தெளிவாகப் புரியக்கூடிய வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2-ஆம் தேதி செய்திக்குறிப்பு வெளியிட்டது.
அதில், ‘லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள 28 இடங்கள் அல்லது நிலப்பகுதிகள், ‘சா்வே ஆஃப் இந்தியா’வின் அதிகாரபூா்வ வரைபடத்தில் உள்ள நிலையான பெயா்களைக் கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணி லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் உள்ளூா் தரப்பினருடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்டது’ என் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.