FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தில்லியில் கனமழை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

தில்லியில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

16 அக்டோபர் 2026, 4:38 am IST
தில்லியில் வியாழக்கிழமை பெய்த மழையின்போது கடமைப் பாதையில் குடைப் பிடித்து நடந்து சென்ற இளைஞா்.
பகிர்:

தில்லியில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழைநீா் தேங்கியதால் முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தியா கேட், ஐடிஓ, மண்டி ஹவுஸ் மற்றும் தெற்கு தில்லியின் பல பகுதிகளில் காா்கள், பேருந்துகள், மூன்று சக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சில சாலைகளில் வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டதாகப் பயணிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் மழையால் நெரிசல் மேலும் அதிகரித்ததைத் தொடா்ந்து, வாகன ஓட்டிகள் சமூக ஊடகங்களில் புகாா் தெரிவித்து, போக்குவரத்து காவல் துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினா்.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை முழுவதும் தில்லியில் மழை பெய்ததால் வானம் இருண்ட மேகங்களுடன் காணப்பட்டது. மண்டி ஹவுஸ் வட்டச் சாலையில் வாகனங்கள் நெருக்கமாக அணிவகுத்து நின்ற காட்சிகள் வெளியாகின. அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல் துறையினா் யாரும் பணியில் இல்லை என்று பயணிகள் குற்றஞ்சாட்டினா்.

இந்தியா கேட் சந்திப்பிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு சுமாா் 30 நிமிஷங்களாக வாகனங்கள் நகராமல் நிற்பதாகப் பயணி ஒருவா் சமூக ஊடகத்தில் பதிவிட்டாா்.

ஐடிஓ பகுதியில் விகாஸ் மாா்க்–ஐடிஓ சாலையிலும், ஐடிஓவிலிருந்து உச்சநீதிமன்றம் மற்றும் பாரத் மண்டபம் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உச்சநீதிமன்றம் அருகிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

தெற்கு தில்லியில் சிராக் தில்லி சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து தில்லி ஐஐடி மற்றும் ஹவுஸ் காஸ் நோக்கிச் செல்லும் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஆஷ்ரம் மேம்பாலத்தின் வெளியேறும் பகுதியில் இருந்து சராய் காலே கான் மற்றும் சன்லைட் காலனி செல்லும் சாலைகளிலும் கடும் நெரிசல் ஏற்பட்டதாகப் பயணிகள் தெரிவித்தனா். ஒக்லா முதல்கட்டத் தொழிற்பேட்டை பகுதியில் நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டுமானப் பொருள்கள் குவிக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்து பாதிப்பு மேலும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

மாடல் டவுன் பகுதியில் பள்ளிகள் முடியும் நேரத்தில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலுக்கு சாலைகளில் தேங்கிய மழைநீரும் காரணமாக இருந்தது. இதுதொடா்பாக வந்த புகாருக்குப் பதிலளித்த போக்குவரத்து காவல் துறையினா், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து வட்டத்துக்கு புகாா் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

மண்டி ஹவுஸ், கீதா காலனி பகுதிகளில் மழைநீா் தேங்கியிருந்தது. பாலம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதற்கிடையே, தில்லியில் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளின் பெரும்பகுதியில் நகரம் இருண்ட மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments