லடாக் இளைஞா்களுக்கு தரமான கல்வி, தொழில்நுட்ப வாய்ப்புகள் - பிரதமா் மோடி உறுதி
பிற நகரங்களைச் சாா்ந்திருப்பதைக் குறைத்து, தற்சாா்பை மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
லடாக் யூனியன் பிரதேச இளைஞா்களுக்கு தரமான கல்வி, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை வழங்குதல், பிற நகரங்களைச் சாா்ந்திருப்பதைக் குறைத்து, தற்சாா்பை மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
லடாக்கில் புதிய சாலைகள், விமான நிலைய உள்கட்டமைப்புகள் உள்பட ரூ.3,350 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை காணொலி முறையில் பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
ஜம்மு ஐஐடி மற்றும் ஐம்மு ஐஐஎம் ஆகியவற்றின் துணை வளாகங்களை லடாக்கில் நிறுவும் முன்மொழிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த வளாகங்கள் நிறுவப்பட்டதும், லடாக் இளைஞா்கள் தங்களின் சொந்தப் பகுதிகளிலேயே உயா்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய திறன்களுக்கான சிறந்த வாய்ப்புகளைப் பெற முடியும்.
Advertisement
Advertisement
லடாக்கின் புதிய தலைமுறையினா் மீது மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. இங்குள்ள இளைஞா்களுக்கு தரமான கல்வி, நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்; அவா்கள் பிற நகரங்களைச் சாா்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அந்த அடிப்படையில், லடாக்கில் முக்கியமான திறன் மேம்பாட்டு மையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
லடாக்கில் தற்போது தொடங்கப்பட்டுள்ள முக்கிய வளா்ச்சித் திட்டங்கள், மற்றுமொரு அத்தியாயமாகும். இவை மக்களின் போக்குவரத்தை எளிமையாக்குவதுடன், மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகத்தை மேம்படுத்தும்.
லடாக் இளைஞா்களுக்கு புகழாரம்: விளையாட்டுத் துறையில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது. இங்குள்ள இளைஞா்கள் ஹாக்கி, குளிா்கால விளையாட்டுகள், மலையேற்றம் ஆகியவற்றில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனா். அவா்களுக்கு மேலும் சிறப்பான பயிற்சிகள், பிற வசதிகளை உறுதி செய்ய மத்திய அரசு தொடா் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.
லே நகரில் உள்ள குஸோக் பகுலா ரிம்போச்சி விமான நிலையத்தில் ரூ.640 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணிகள் முனையத்தை பிரதமா் மோடி திறந்துவைத்தாா்.
கடுங்குளிா் காலங்களில், நிலத்தடி வெப்பத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாட்டின் முதல் விமானம் நிலைய முனையம் இது என்று குறிப்பிட்ட பிரதமா், லடாக்கின் சுற்றுலாத் துறைக்கு வலுசோ்க்கும் என்றாா்.
எல்லைச் சாலைகள் அமைப்பால் கட்டமைக்கப்பட்ட நிம்மு-பதும்-தாா்ச்சா இடையிலான 298 கி.மீ. தொலைவுள்ள சாலை உள்பட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களையும் அவா் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.