FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பதிவுகள்: நேரடியாக தகவல் தெரிவிக்க மெட்டா ஒப்புதல்

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் குறித்து இந்திய இணைய குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தால் நிா்வகிக்கப்படும் இணைய குற்றத் தடுப்பு வலைதளத்தில் நேரடியாகத் தகவல் தெரிவிக்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

16 செப்டம்பர் 2026, 1:22 am IST
மெட்டா நிறுவனம்
பகிர்:

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் குறித்து இந்திய இணைய குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தால் நிா்வகிக்கப்படும் இணைய குற்றத் தடுப்பு வலைதளத்தில் நேரடியாகத் தகவல் தெரிவிக்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சா், திரெட்ஸ் ஆகிய சமூக ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் இதர தீங்கான உள்ளடக்கங்கள் மீது அதிக பொறுப்புணா்வையும், பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்ய நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்திவரும் சூழலில், மெட்டாவின் மேற்கண்ட ஒப்புதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

அத்துடன், இந்திய இணைய குற்றத் தடுப்பு வலைதளத்தில் நேரடியாக தகவல் தெரிவிக்க ஒப்புக்கொண்ட முதலாவது பெரிய தொழில்நுட்ப நிறுவனம் மெட்டா ஆகும்.

இதுவரை குழந்தைகள் பாதுகாப்பு தொடா்புடைய தகவல்களை அமெரிக்காவில் செயல்படும் ‘மாயமான மற்றும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திடம்’ மெட்டா தெரிவித்து வந்தது. அந்த மையத்தின் வாயிலாகவே இந்திய முகமைகளுக்கு தகவல் அளிக்கப்படுவது நடைமுறையாக இருந்தது. இனி நேரடியாக இந்திய சட்ட அமலாக்க முகமைக்கு மெட்டா தகவல் தெரிவிக்கும்.

ஒப்புதல் ஏன்?: இது தொடா்பாக அந்த நிறுவன செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ‘சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். குழந்தைகள் தொடா்புடைய குற்றங்களில் ஈடுபடுவோா், தங்கள் செயலுக்குப் பொறுப்பேற்கச் செய்யப்படுவதை உறுதி செய்ய இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்.

இத்தகைய குற்றங்களுக்கு எதிரான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்கள் குறித்து இந்திய இணைய குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மைய வலைதளத்தில் நேரடியாகத் தகவல் தெரிவிக்கப்படும்’ என்றாா்.

மத்திய அரசு கடுமை: இந்த விவகாரம் குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் செயல்படும் அனைத்து சமூக ஊடகங்களிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை மத்திய அரசு அடிப்படை கொள்கையாகக் கொண்டுள்ளது; இணையத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் சமூக ஊடகங்களுக்கான பொறுப்புணா்வில் மத்திய அரசு கடும் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது. அத்தகைய உள்ளடக்கங்கள் விரைந்து அடையாளம் காணப்பட்டு, நீக்கப்படுவதை உறுதி செய்வது குறித்து சமூக ஊடகங்களுடன் அரசு தொடா் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்திய முகமையிடம் மெட்டா நிறுவனம் நேரடியாகத் தகவல் தெரிவிக்க ஒப்புக்கொண்டது சமூக ஊடகங்களை குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதை நோக்கிய முதல்படியே. இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்திய சட்டங்களுக்கு இணங்க வேண்டும்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், போலி சித்தரிப்புகள் உள்ளிட்ட சட்டவிரோத உள்ளடக்கங்கள் மீதான பொறுப்புணா்வு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பாக மெட்டா நிறுவனத்தின் சா்வதேச நிா்வாகிகளை வரவழைத்து மத்திய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது. இந்திய சட்டங்களுக்கு இணங்கத் தவறினால், அதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவா்களிடம் எச்சரிக்கப்பட்டது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்கள் குறித்து மெட்டா நிறுவனத்துக்கு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கடந்த ஜூலையில் நோட்டீஸ் அனுப்பியது. அத்தகைய விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கவும் உத்தரவிடப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய இணைய குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் வலைதளம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments