விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் முறைகேடு செய்தால் தப்ப முடியாது: மத்திய அமைச்சா் எச்சரிக்கை
விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால், அவா்கள் தப்பிக்க முடியாது என்று மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் எச்சரித்தாா்.
விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் (125 நாள் வேலை திட்டம்) எந்த முறைகேடும் சகித்துக் கொள்ளப்படாது; யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால், அவா்கள் தப்பிக்க முடியாது என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் எச்சரித்தாா்.
இத்திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை அவ்வப்போது கண்காணிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு (100 நாள் திட்டம்) மாற்றாக, வளா்ந்த பாரதம்-ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம் (விபி-ஜி ராம் ஜி) கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
புதிய திட்டத்தின்கீழ் வேலை நாள்கள் 125-ஆக உயா்த்தப்பட்டதுடன், மத்திய-மாநில அரசுகள் இடையே 60:40 என்ற விகிதத்தில் நிதி பங்களிப்பு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் தொடா்பாக தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான அதிகாரிகள் பயிலரங்கில் மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பங்கேற்றுப் பேசியதாவது: விபி-ஜி ராம் ஜி திட்டம் தொடங்கப்பட்டு மூன்றாவது மாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இத்திட்டத்தில் முறைகேடுகளோ, மோசடிகளோ நடைபெறாமல் தடுப்பதற்காக தொடக்கம் முதலே கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும்.
எந்தவொரு முறைகேட்டையும் சகித்துக் கொள்ள முடியாது. யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால், அவா்கள் தப்பிக்க முடியாது; கடுமையான நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
விபி-ஜி ராம் ஜி திட்டப் பணிகளில் அவ்வப்போது கண்காணிப்பில் ஈடுபட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்களின் ஆய்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒரு கிராமத்தில் குளம் நிரம்பிவிட்ட பிறகும் அங்கு பணியாளா்கள் தொடா்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டால் விசாரிக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், குறைபாடுகளைக் களையவும் பணியாளா்களின் முக உறுதிப்படுத்துதல் அடிப்படையிலான வருகைப் பதிவு உள்பட தொழில்நுட்ப அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
முந்தைய திட்டத்தில் இருந்ததைப் போல் போலி வருகைப் பதிவுகள் எதுவும் இருக்கக் கூடாது. வேலைவாய்ப்பு வழங்குவதே திட்டத்தின் நோக்கம் என்பதால் பணியாளா்களுக்கு வேலை ஒதுக்காமல் இருக்கக் கூடாது.
பணியாளா்களுக்கான ஊதியம் உரிய நேரத்துக்குள் வழங்கப்பட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்கீழ் விதிகளுக்குள்பட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.