ஜம்மு - காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இருவா் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இருவா் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். அங்கு தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இது தொடா்பாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டதாவது: உதம்பூா் மாவட்ட மலைக்காட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் ராணுவம் மற்றும் மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் (சிஆா்பிஎஃப்), காவல் துறையினா் இணைந்து புதன்கிழமை முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
கடும் மழைக்கு நடுவே தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட வீரா்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரா்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
Advertisement
Advertisement
அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் தொடா்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
கொல்லப்பட்ட இருவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவா்களிடம் இருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 மற்றும் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட வேறு சில பொருள்களை ஆதாரமாகக் கொண்டு இவா்களுக்கு உதவியாக இருந்த உள்ளூரைச் சோ்ந்த இளைஞா் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் பயங்கரவாதிகளுக்கு தேவையான பொருள்களை ரகசியமாக வாங்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வைத்துள்ளாா்.
உதம்பூரில் இந்த ஆண்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தேடுதல் வேட்டை இதுவாகும். கடந்த பிப்ரவரியில் பயங்கரவாத கமாண்டா் அபு மாவியா உள்ளிட்ட இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
உதம்பூா், கதுவா, தோடா பகுதியில் உள்ள மலைகள் மற்றும் வனப் பகுதிகள் பயங்கரவாதிகளின் பதுங்குமிடமாக பல ஆண்டுகளாக இருந்தன. ஆனால், பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் தாக்குதல்களால் அங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்துவிட்டன.
இந்த ஆண்டு அங்கு பயங்கரவாதிகளால் காவல் துறையினா், ராணுவத்தினா் கொல்லப்படும் சம்பவம் ஒன்றுகூட நிகழவில்லை. 2025-ஆம் ஆண்டு அங்கு 4 பாதுகாப்புப் படையினரும், 2024-இல் 3 பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.