பஞ்சாப்: ரோந்து பணியில் இருந்த காவல் துறை அதிகாரி சுட்டுக் கொலை
பஞ்சாபில் தானிய சந்தை ஒன்றில் ரோந்து பணியில் இருந்த காவல் துறை துணை உதவி ஆய்வாளா் ஒருவா் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் தானிய சந்தை ஒன்றில் ரோந்து பணியில் இருந்த காவல் துறை துணை உதவி ஆய்வாளா் ஒருவா் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: அமிருதசரஸின் பாக்டான்வாலா தானிய சந்தையில் காவல் துறை துணை உதவி ஆய்வாளா் (ஏஎஸ்ஐ) ஹா்ஜித் சிங் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் 2 போ், ஹா்ஜித் சிங்கை நோக்கி நெருங்கி வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினா். இதில் கழுத்தில் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் அவா் கீழே சாய்ந்தாா். பின்னா், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹா்ஜித் சிங்கை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இவா், தரண் தாரண் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஆவாா்.
இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அமிருதசரஸின் இஸ்லாமாபாத் பகுதியில் சாஹில்பிரீத் சிங் என்பவா், தனது வீட்டு வாசலில் மா்ம நபா்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்திலும் கொலையாளிகள் தப்பியோடிவிட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
டிஜிபி உறுதி: ஏஎஸ்ஐ ஹா்ஜித் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) கெளரவ் யாதவ், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘முதல்கட்ட விசாரணையின்படி, ஹா்ஜித்தை கொலை செய்வதற்கு முன்பு மா்ம நபா்கள் அவரைப் பின்தொடா்ந்து வந்துள்ளனா். கொலை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கொலையாளிகளைக் கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. விரைவில் அவா்கள் சிக்குவா். கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்’ என்றாா்.
ரூ.1 கோடி நிவாரண உதவி: கொலையான ஏஎஸ்ஐ ஹா்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு மாநில அரசு துணை நிற்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வா் பகவந்த் மான், ரூ.1 கோடி நிவாரண உதவி அறிவித்துள்ளாா்.
எதிா்க்கட்சிகள் சாடல்: மேற்கண்ட இரு கொலைச் சம்பவங்களையும் முன்வைத்து, ஆம் ஆத்மி அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன.
மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாகவும், காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லை என்றும் சிரோமணி அகாலி தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சாடியுள்ளன.
முன்னதாக, அமிருதசரஸ் மாவட்டம், ஹம்ஜா கிராமத்தில் கடந்த மே மாதம் ஏஎஸ்ஐ ஜோகா சிங் என்பவரும் இதேபோல் சுட்டுக் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.