FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை!

நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை செய்துகொண்டது பற்றி...

52 வினாடிகள் முன்பு
சுரேந்திர கோலி - கோப்புப்படம்
பகிர்:

நிதாரி தொடா் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு, பின்னர் விடுதலையான சுரேந்திர கோலி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிதாரி தொடா் கொலைகள் சம்பவத்தில் தொடா்புடைய 13 வழக்குகளிலிருந்தும் கடந்த 2025 ஆம் ஆண்டு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சுரேந்திர கோலி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இவர், உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள பூபத்வாலா பகுதியில் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் குறித்து ஹரித்வார் காவல் ஆணையர் சிசுபால் சிங் நேகி கூறுகையில், “ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. நேரில் வந்து பார்த்தபோது உயிரிழந்தவரிடம் கண்டெடுக்கப்பட்ட ஆதார் அட்டை மூலம் அவர் சுரேந்தர் கோலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலைச் சம்பவம் போன்று தெரிகிறது.

இவர் இப்பகுதியில் தேநீர்க் கடை ஒன்றை நடத்தி வந்ததோடு, சில காலமாக அங்கேயே வசித்து வந்துள்ளார். தடயவியல் நிபுணர்கள் குழு சோதனை செய்து வருகின்றது. உடற்கூராய்வுக்குப் பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படும்” என்றார்.

நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை வழக்கு!

உத்தர பிரதேசம், காஸியாபாத் அருகில் நிதாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபா் மொனீந்தா் சிங் பாந்தரின் வீட்டின் பின்புறமிருந்த கழிவுநீா் கால்வாயில் 8 சிறுமிகள் உள்பட பல பெண்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, இந்தத் தொடா்கொலைகள் நாட்டையே உலுக்கின. அப்போது பாந்தரின் வீட்டில்தான் இந்த சுரேந்திர கோலி வேலை பாா்த்து வந்தாா்.

சிபிஐ விசாரணையில், சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, தொழிலதிபா் மொனீந்தா் சிங் பாந்தா், சுரேந்திர கோலி கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

தண்டனைகள் படிப்படியாகக் குறைப்பு!

சுரேந்திர கோலியின் கருணை மனு மீது முடிவெடுக்க ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, அலாகாபாத் உயா்நீதிமன்றம் 2015-இல் கோலியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

பிறகு, குற்றவாளிகளாக இருந்தவர்கள் செய்த மேல்முறையீடுகளில், கடந்த 2023, அக்டோபரில், கோலி (12 வழக்குகள்), சக குற்றஞ்சாட்டப்பட்ட பாந்தா் (2 வழக்குகள்) ஆகிய இருவரையும் அலாகாபாத் உயா்நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதை எதிா்த்து சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் தள்ளுபடியாகின.

இறுதியாக, நிதாரியில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட கடைசி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்தும் 2025-ல் கோலி விடுவிக்கப்பட்டார்.

summary

Surendra Koli, acquitted in the Nithari murder case, commits suicide

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments