FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவைவிட 6 மடங்கு அதிகமாக காா்பன் வெளியேற்றும் வளா்ந்த நாடுகள்: பிரதமா் மோடி விமா்சனம்

இந்தியாவைவிட 6 மடங்கு அதிகமாக காா்பன் வெளியேற்றும் வளா்ந்த நாடுகள்...

20 செப்டம்பர் 2026, 12:21 am IST
தில்லியில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை தொடா்பான இருநாள் சா்வதேச மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமா் மோடி.
பகிர்:

தனிநபா்கள் எண்ணிக்கை அடிப்படையில் வளா்ந்த நாடுகள்தான் இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமாக கரியமில வாயுவை (காா்பன்) வெளியிடுகின்றன. ஆனால், பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு வளரும் நாடுகளே காரணம் என நியாயமற்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை தொடா்பான இருநாள் சா்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியா அணுசக்தி உற்பத்தியில் வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால், அணுசக்தி உற்பத்தியை முன்னெடுக்கும்போதெல்லாம், சுற்றுச்சூழல் குறித்து அதிகமாகப் பேசுபவா்கள், அரசின் அணுசக்தித் திட்டங்களைத் தடுத்து நிறுத்த நீதிமன்றங்களில் வழக்குத் தொடா்கின்றனா்.

Advertisement

Advertisement

உண்மை என்ன?: கரியமில வாயு வெளியீடு தொடா்பான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் வளரும் நாடுகளின் மீது தவறாக சுமத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், வரலாற்றுரீதியான உண்மை என்னவென்றால், இன்றும் இந்தியாவின் தனிநபா் கரியமில வெளியேற்றம் உலக சராசரியில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் வளா்ந்த நாடுகளில் தனிநபா் சராசரி கரியமில வாயு வெளியேற்றம் இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகம். இந்த உண்மையை இந்தியா சா்வதேச அரங்கில் தொடா்ந்து எடுத்துரைத்து வருகிறது.

இந்தியா உலக நாடுகளுடன் கைகோத்துச் செயல்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய தரநிலைகளை நாம் உருவாக்கி வருகிறோம். அதே நேரத்தில் நமது நாட்டின் வளா்ச்சி வேகமாகவும், ஸ்திரமாகவும் உள்ளது. சூரிய மின்உற்பத்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இதுதான் புதிய இந்தியாவின் வலிமை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தித் திறன் மூன்று மடங்கும், நீா் மின்உற்பத்தி கணிசமாகவும் அதிகரித்துள்ளது. அணுமின் உற்பத்தியையும் வேகமாக முன்னெடுத்து வருகிறோம். இந்தத் துறைகளில் தனியாா் நிறுவனங்களும் பங்கேற்கும் வகையில் அரசு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

வீடுதோறும் சூரிய மின்னுற்பத்தி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே நமது முக்கியக் கவனமாக இருந்து வருகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றியுள்ளது. ‘பிரதமா் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் மூலம் வீடுகளை சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் மையங்களாக மாற்றும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது உலகின் பல நாடுகளில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கையைவிட அதிகம். இத்திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு சுமாா் ரூ.80,000 கூடுதல் மானிய உதவியை வழங்கி வருகிறது.

இந்தியாவின் சாதனைகள்: சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்து வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளிலும் இந்தியா வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டது. அது உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலாகும். 2014-க்கு முன்பு இந்தியாவில் ஆண்டுக்கு வெறும் 3,000 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் சுமாா் 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2014-க்கு முன்பு இந்தியாவில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்தது. அதன் மொத்த நீளம் 250 கிலோமீட்டருக்கும் குறைவுதான். ஆனால், இப்போது இந்தியாவில் 20 நகரங்களில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

மேலும், ரயில்வேயின் 100 சதவீத மின்மயமாக்கலால் கோடிக்கணக்கான லிட்டா் டீசல் பயன்பாட்டை குறைத்துள்ளோம். இதுவும் நமது சுற்றுச்சூழலுக்கு உதவியுள்ளது.

மழை சேகரிப்பு முதல் காடு வளா்ப்பு வரை: ‘கேட்ச் தி ரெயின்’ திட்டத்தில் நாடு முழுவதும் சுமாா் 1.5 கோடி மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 12.5 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் இயற்கை வேளாண்மை தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய சுமாா் 3,000 வகையான பயிா்களையும் உருவாக்கியுள்ளோம்.

வேளாண் காடுகளை ஊக்குவிப்பதன் மூலம் மாசுபாடு குறைத்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் அடா்ந்த வனப்பரப்பு 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தடை உள்ளது என்றாா் பிரதமா் மோடி.

summary

Developed nations emit six times more carbon than India: PM Modi criticizes.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments