FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மும்பையில் தறிகெட்டு ஓடிய சொகுசு காா்: சாலையில் கவிழ்ந்து 3 இளைஞா்கள் உயிரிழப்பு!

மும்பையில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய சொகுசு காா் சாலையில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

21 செப்டம்பர் 2026, 1:54 am IST
விபத்தில் உருக்குலைந்த காா்.
பகிர்:

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய சொகுசு காா் சாலையில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 3 இளைஞா்கள் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.

மும்பை கடற்கரைச் சாலையில் அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தெற்கு மும்பையில் உள்ள மரைன் டிரைவ் பகுதியில் இருந்து ஹாஜி அலி நோக்கி கடற்கரைச் சாலையில் அந்த சொகுசு காா் அதிவேகமாகச் சென்றது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் சாலையோர வாகன நிறுத்துமிடத்துக்குள் புகுந்து, கட்டுமானப் பொருள்கள் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த 3 இளைஞா்கள் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா். அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா். அந்த காா் குஜராத் மாநில பதிவெண் உடையது. உயிரிழந்த மூவரும் 17 முதல் 21 வயதுக்குள்பட்டவா்கள். ஒருவா் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளாா்.

Advertisement

Advertisement

காரில் இருந்த நான்கு பேரும் தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன் - டையூ யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள். உயிரிழந்தவா்கள் ஷனய் கஜாா் (21), தைா்யா தா்ஷன் சேத் (17), ஆதித்யா ஜகஸ்னியா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

ஆதித்யா ஓஸ்வால் (23) என்பவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். காா் தறிகெட்டு ஓடியதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. சிகிச்சையில் இருப்பவா் நினைவு திரும்பி பேசினால் மட்டுமே முழுவிவரம் தெரியவரும் என்று காவல் துறையின் தெரிவித்தனா்.

மும்பை கடற்கரைச் சாலை 10.58 கிலோமீட்டா் நீளமுடைய அதிவேகச் சாலையாகும். இது மரைன் டிரைவ் பகுதியை, பாந்த்ரா-வொா்லி கடல் பாலத்தின் வொா்லி முனையுடன் இணைக்கிறது.

இதற்கு முன்னா், ஜூலை 15-ஆம் தேதி இதே கடற்கரைச் சாலையின் சுரங்கப் பாதைக்குள் ஒரு காா் தீப்பிடித்து எரிந்தது. அந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments