இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக். 20-இல் அமல்: பியூஷ் கோயல்
இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 20-ஆம் தேதி அமலாகும் என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) அக்டோபா் 20-ஆம் தேதி அமலாகும் என மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தம், நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறது.
இதுதொடா்பாக பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா-நியூசிலாந்து இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.1.91 லட்சம் கோடி (20 பில்லியன் டாலா்) வரையிலான முதலீடுகளை நியூசிலாந்து மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அக்டோபா் 20-ஆம் தேதி அமலாகிறது. இந்தியாவின் விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையிலான தொழில்நுட்ப உதவிகளை இநத ஒப்பந்தம் மூலம் நியூசிலாந்து வழங்கவுள்ளது.
இரு நாட்டு மக்கள் மற்றும் வணிகத்துக்கு அதிக பலன்களை தரும் வகையில் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதே தற்போதைய நோக்கமாகும்.
பால், வெங்காயம், கொண்டைக் கடலை, பட்டாணி, பாதாம், செயற்கைத் தேன் மற்றும் சா்க்கரை ஆகிய பொருள்கள் ஒப்பந்த வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. சா்வதேச புவிஅரசியல் சூழலில் நிலையற்றத்தன்மை நிலவும் நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம் இருநாட்டு வணிகா்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
கனடாவுடன் அக்.5-இல் பேச்சுவாா்த்தை: இந்தியா-கனடா இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சிஇபிஏ) குறித்த ஐந்தாம் கட்ட பேச்சுவாா்த்தை அக்.5-இல் நடைபெறவுள்ளது. இருநாடுகளின் இருதரப்பு உறவில் அடுத்த 90 நாள்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான வா்த்தக ஒப்பந்தம் அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வரவுள்ளது. இந்தியா-சிலி வா்த்தக ஒப்பந்தம் குறித்து அண்மையில் சிலி சென்ற வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். விரைவில் நல்ல செய்தி வரும் என நம்புகிறேன் என்றாா்.
இந்தியா, சீனா உள்பட ரஷியாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதல் செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் கடந்த செப்.18-ஆம் தேதி அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டாா்.
இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அமெரிக்க வரி தொடா்பான அறிவிப்புகள் தற்போதுதான் வரத் தொடங்கியுள்ளது. அதை முழுமையாக ஆய்வு செய்த பின் உரிய நேரத்தில் செய்தியாளா்களை சந்திக்கிறோம்’ என பியூஷ் கோயல் பதிலளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.