பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா!
இந்திய விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலாக சீனாவின் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த 17 மாதங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் தடை விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலாக சீனாவின் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வாயிலாக சீன அதிகாரிகளுடன் இதுபற்றி பலகட்டமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், சீனாவின் வடமேற்குப் பகுதியான ஜின்ஜியாங்கில் உள்ள ஹோட்டன் நகருக்கு மேலே விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஜின்ஜியாங் வான்வெளியில் சில பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு விமானங்களை இயக்குவதற்கான அனுமதியைப் பெறுவது கடினமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
ஏப்ரல் 22, 2025 அன்று நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் அதே நடவடிக்கையை மேற்கொண்டது.
பின்னர் இரு நாடுகளும் தடையை தொடர்ந்து நீடித்து வருகின்றனர். தற்போதைய தடை அக். 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான இந்திய விமான சேவைகள் மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது பயண நேரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டையும் அதிகப்படுத்தியுள்ளது.
நீண்ட தூரப் பயணங்களுக்கு விமானப் பணிநேரக் கட்டுப்பாடுகள் காரணமாக கூடுதல் விமான ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டிய கட்டாயமும் ஏற்படுவதாக விமான நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தியா - சீனா இடையே மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவைகள்
இந்தியா - சீனா இடையே ஜூலை 2020-இல் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும், கடந்த ஓராண்டில் இரு நாடுகளின் உறவுகளும் மேம்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 5.5 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே முதல் விமான சேவை அக்டோபர் 26, 2025 அன்று மீண்டும் தொடங்கியது.
இண்டிகோ நிறுவனம் தற்போது தில்லி-குவாங்சூ, கொல்கத்தா-குவாங்சூ மற்றும் கொல்கத்தா-ஷாங்காய் என சீனாவுக்கு மூன்று வழித்தடங்களில் விமானங்களை இயக்குகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் பிப்ரவரி 1, 2026 அன்று தில்லிக்கும் ஷாங்காய்க்கும் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்கியது.
சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஒரு வாரத்திற்கு முன்பு குவாங்சூ - தில்லி இடையே சேவையைத் தொடங்கியது. அதேநேரம், ஏர் சைனா நிறுவனம் ஏப்ரல் 21 அன்று பெய்ஜிங் - தில்லி இடையே விமான சேவையை மீண்டும் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் நடத்திவரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இந்திய விமானங்களின் நீண்டதூர பயணங்களால் ஏற்படும் சிரமங்கள் குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Ban on using Pakistani airspace: India in talks with China.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.