நீதிக் கதைகள்! கனவும் பலனும்!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
ஒரு நகரத்தில் ராமசாமி என்ற பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார்! அவர் தனது தொழிற்சாலைக்குத் தேவையான மூலப் பொருட்களை வாங்குவதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஒரு நாள் இரவு தொழிற்சாலையிலிருந்து நேராக இரயில் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அவர் செல்ல வேண்டிய இரயில்வண்டி இரவு பன்னிரெண்டு மணிக்குப் புறப்பட இருந்தது!
அப்போது அவருடைய தொழிற்சாலைக் காவல்காரன் விரைந்து வந்து அவரிடம் வணங்கி நின்றான்.
"என்ன செய்தி? ஏன் இப்படி வேகமாக வருகிறாய்?''
Advertisement
Advertisement
அவரிடம், "ஐயா! தாங்கள் செல்லும் இந்தப் பயணம் தங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது! நாளை காலை உங்களை ஒரு மனிதர் சந்திப்பது போலவும், அவர் தங்களுக்கு ஒரு பெரிய பரிசைத் தருவது போலவும் நான் இப்போதுதான் கனவு கண்டேன்!'' என்றான்.
வியப்புடன் அவனைப் பார்த்தார் ராமசாமி! இரயில் வண்டிக்கு நேரமாகி விட்டதால் அவர் புறப்பட்டு விட்டார்!
மறு நாள் அவர் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றார். அங்கு அவர் எதிர்பாராத விதமாக தொழிலதிபர்களின் சங்கத் தலைவர் ஒருவரைச் சந்தித்தார்.
சங்கத் தலைவர் ராமசாமியைப் பார்த்து, "ஐயா தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி! உங்களுக்கு ஒரு நல்ல செய்தி! இந்த ஆண்டு சிறந்த தொழிலதிபருக்கான விருது தங்களுக்குக் கிடைத்திருக்கிறது! இந்த விருது பெருமை வாய்ந்ததாகும்! ரூபாய் ஐந்து லட்சம் இந்த விருதோடு உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் இந்த ஊருக்கு வரும் செய்தியை நான் நேற்று அறிந்தேன். எனவே உங்களை நேரில் சந்தித்து இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்தேன். நிர்வாகத் திறமையும், ஒழுக்கமும், நாணயமும், கட்டுப்பாடும் உள்ள உங்கள் தகுதிக்கு இந்த விருது கிடைத்ததில் எங்கள் சங்கத்தில் உள்ளோருக்கும் மகிழ்ச்சி! விருது வழங்கும் தேதியும், இடமும் பின்னர் உங்களுக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவலாக அனுப்புவோம்!''
ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி! புறப்படும்போது தனது காவல்காரன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது!
வேலை முடிந்து ஊர் திரும்பினார்.
காவல்காரனைச் சந்தித்து, "நீ கூறியது உண்மை....! நீ சொன்னது போலவே, எனக்கு ஒரு நல்ல செய்தி வந்தது! ஆனால் அதற்காக நான் உனக்கு தண்டனைதான் வழங்க முடியும்...! உனக்கு நான் ஐந்து நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். ஏன் தெரியுமா? வேலை நேரத்தில் தூங்கியதற்காக!...மேலும் எத்தனை நாள் இது மாதிரி தூங்கியிருக்கிறாயோ?'' என்றார்.
"காவல்காரன் தலையைக் குனிந்து கொண்டு, "என்னை மன்னிச்சுடுங்க ஐயா! இனி விழிப்புணர்வோடு இருப்பேன்'' என்றான்.
A moral story that children should know.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.