FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நீதிக் கதைகள்! மனம்தான் அனைத்து வியாதிகளுக்கும் காரணம்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

13 அக்டோபர் 2026, 1:53 pm IST
பகிர்:

பவளத்தீவு நாட்டின் மகாராணி கை நாடியைப் பிடித்துப் பார்த்தார் அரண்மனை வைத்தியர் சிகாமணி,

"மன்னா.. நானும் என்னால் இயன்றவரை எல்லா சூரண லேகிணய குளிகங்களும் தந்து பார்த்து விட்டேன்.. என்ன செயவது என்று தெரியவில்லை இந்த வியாதிக்கு.."

அருகில் இருந்த அமைச்சர் பூபதி, "மன்னா இமயமலையில் இருந்து சிவரிஷிபண்டிதர் என ஒரு வைத்தியர் நம் நாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளார்..

Advertisement

Advertisement

அவரிடம் மகாராணிக்கு வைத்தியம் பார்த்தால் என்ன?.."எனக் கேட்டார்.

மகாராஜா உடனே வைத்தியரிடம், "வைத்தியரே.. உங்கள் கருத்து என்ன?.."என்று வினவினார்.

"மன்னா.. சிவரிஷிபண்டிதரைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.. தீராத வியாதிகளையெல்லாம் தீர்த்து வைக்கும் ஆற்றல் உள்ளவர் என்று.. அவசியம் அவரிடம் வைத்தியம் பார்க்கலாம்.."என்றார் வைத்தியர்.

அமைச்சரிடம் மன்னர், "ஏற்பாடு செய்யுங்கள்!" என்றார்.

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மகாராணி, "இமயமலையில் அரிய மூலிகைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்..அந்த சிவரிஷி பண்டிதர் நிச்சயம் என்னைக் குணப்படுத்தி விடுவார்"..என்றாள் படுத்தபடி.

அடுத்த வாரத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் சிவரிஷி பண்டிதர் பல்லக்கில் வந்து அரண்மனை வாசலில் இறங்கினார்.

அவரைப் பார்க்க ஒரே மக்கள் கூட்டம். காவலர்கள் ஒழுங்கு செய்தனர்.

பல்லக்கிலிருந்து இறங்கி காவி ஆடை! நீண்ட ஜடாமுடி முழங்கால் வரை தொங்கியது! விபூதி பூசி உடலெங்கும் வெள்ளையாக இருந்தது! மருந்துப் பெட்டியுடன் சீடர்கள் இருவர் சென்றனர்!

கூட்டத்தில் ஒருவன், "ரிஷி சாமி வைத்தியத்தில் கில்லாடி ஆனால் பாவம் பிறவி ஊமையாம்! காதும் கேட்காதாம்!"..என்றான்.

மற்றவன், "அதனால் என்ன வைத்தியம் பலித்தால் சரி!"....

மகாராணி நாடியைப் பார்த்துவிட்டு வைத்தியர் சீடனிடம் ஜாடை காட்ட அவன் இரு பெரிய ஜாடிகளை வைத்தான் அவரிடம்.

ஜாடையாக ஏதோ பண்டிதர் சொல்ல சீடன் விளக்கினான்.

மன்னா, "இரு ஜாடிகளிலும் உள்ள மருந்தை மூன்று வேளை கால் ஆழாக்கு ஒரு குவளையில் கலந்து சாப்பிடச் சொல்லுகிறார்"....

கால் நாழிகையில் கிளம்பிவிட்டார் வைத்தியர்.. மன்னர் ஒரு பொற்கிழியை வழங்க சீடனிடம் கை காட்டினார் பண்டிதர்.

பணத்தைத் தொட மாட்டார் பண்டிதர் என்றார் அமைச்சர்.

என்ன ஆச்சரியம்! ஒரே வாரத்தில் மகாராணி எழுந்து உட்கார்ந்துவிட்டாள்.

ஒரு மாதத்தில் நடந்து கோவிலுக்கும் செல்ல ஆரம்பித்து பரிபூரணக் குணம் அடைந்தாள்.

அரண்மனை வைத்தியர் சிகாமணி குடிசையில் அமைச்சரும் மன்னரும் பாயில் அமர்ந்திருந்தனர்.

அமைச்சர், "பாருங்கள் வைத்தியரே.. இமயமலை பண்டிதர் வேடம் தரித்து நீங்கள் தந்த மருந்தில் மகாராணி விரைவாகக் குணம் அடைந்து விட்டாள்! ஆமாம் இந்த யோசனை எப்படி உதித்தது?"

வைத்தியர் வணங்கி, "என் வைத்தியத்தில் மகாராணிக்குத் திருப்தி இல்லை என அறிந்தேன்.. உண்மையில் அவருக்கு உடலில் ஒரு வியாதியும் இல்லை.. ஒரு ஜாடியில் சுத்த தேனும், மறு ஜாடியில் குங்குமப் பூவும் தான் இருந்தன..மனம்தான் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். அவர் மனதில் உண்டான நம்பிக்கையும் திருப்தியுமே அவர் குணமாகக் காரணம்!"

சிரித்தபடி மன்னர் ஒரு பொற்கிழியை வழங்கி விட்டுக் கிளம்பினார்குதிரையில், அமைச்சர் பின் தொடர.

summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments