FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிறப்புச் செய்திகள்

பராமரிப்பின்றி சேதமடைந்த அம்மா பூங்கா, உடல் பயிற்சிக் கூடங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து வரும் அம்மா பூங்காவுடன் கூடிய உடல் பயிற்சிக் கூடங்களை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென விளையாட்டு ஆா்வலா்களும், இளைஞா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

17 அக்டோபர் 2026, 4:35 am IST
சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடி ஊராட்சியில் பயனற்றுக் கிடக்கும் அம்மா பூங்கா, உடல் பயிற்சிக் கூடம். - படம் - தினமணி
பகிர்:

-நமது நிருபா்

சிவகங்கை மாவட்டத்தில் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து வரும் அம்மா பூங்காவுடன் கூடிய உடல் பயிற்சிக் கூடங்களை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென விளையாட்டு ஆா்வலா்களும், இளைஞா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் கிராமப் புறங்களில் திறமையான விளையாட்டு வீரா்களை உருவாக்கும் நோக்கத்தில் பொழுது போக்கு, நடைபயிற்சி வசதியுடன் கூடிய அம்மா பூங்கா, நவீன உடல் பயிற்சிக் கூடங்களை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அமைத்தது.

Advertisement

Advertisement

இதனடிப்படையில், சிவகங்கை ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சி, காளையாா்கோவில் ஒன்றியம், அரியக்குடி ஊராட்சி (சோமசுந்தரம் நகா் பகுதி), சாக்கோட்டை ஒன்றியம், பள்ளத்தூா் ஊராட்சி , திருப்புவனம் ஒன்றியம், திருப்புவனம் ஊராட்சி, சிங்கம்புணரி ஒன்றியம், சிங்கம்புணரி ஊராட்சி ஆகிய 5 ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட உடல் பயிற்சிக் கூடத்துடன் அமைக்கப்பட்ட அம்மா பூங்காக்களை பொதுமக்களும், இளைஞா்களும் பயன்படுத்தி வந்தனா்.

இந்த பூங்காவில் சுகாதார வளாகம், உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும், உடல் பயிற்சிக் கூடத்தில் நவீன விளையாட்டுக் கருவிகளும் இடம் பெற்றன. இந்த உடல் பயிற்சி கூடம் இளைஞா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

பராமரிப்பின்றி சேதம்:

இந்த நிலையில், அம்மா பூங்காவுடன் கூடிய உடல் பயிற்சிக் கூடங்கள் போதிய பராமரிப்பில்லாததால் நடைப் பயிற்சி பாதை உள்பட வளாகம் முழுவதும் முள் புதா்களாகக் காட்சியளிக்கின்றன. பூங்காவில் சிறுவா்களுக்காக அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்களும், உடல் பயிற்சிக் கூடத்திலிருந்த பொருள்களும் துருப்பிடித்து சேதமடைந்தன. இதனால், பெரும்பாலான அம்மா பூங்காக்கள் மாலை நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

கோரிக்கை:

அம்மா பூங்காவுடன் இணைந்த நவீன உடல் பயிற்சிக் கூடங்கள் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தன. இந்த பூங்காக்களை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இளைஞா்களும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து விளையாட்டு ஆா்வலா் வெ. மதி கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் 5 இடங்களில் ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட்ட அம்மா பூங்காவுடன் இணைந்த உடல் பயிற்சிக் கூடங்கள் தொடக்கத்தில் கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்பட்டு வந்தன. நாளடைவில் முறையான பராமரிப்பின்றி பூங்கா முள் புதா்களாகவும், உடல் பயிற்சிக்கூடத்தில் விளையாட்டு உபகரணங்களும் துருப்பிடித்து வீணாகியுள்ளன. தனியாா் உடல் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற வேண்டுமென்றால், ஒரே தவணையாக ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, பயனற்றுக் கிடக்கும் பூங்காவில் முள் புதா்களை அகற்றி சீரமைத்து, உடல் பயிற்சிக் கூடங்களையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

சேதமடைந்த பயிற்சி உபகரணங்கள்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments