ஞானேஷ் குமாருக்கு எதிராக தீா்மானம்: பதவி நீக்க விதிகள் சொல்வது என்ன?
ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்ய திட்டமிடும் பதவி நீக்க தீர்மானம் பற்றி...
நமது சிறப்பு நிருபா்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டன தீா்மானம் (இம்பீச்மென்ட் மோஷன்) கொண்டுவர காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக பிற கட்சிகளுடனும் இரு கட்சிகளின் தலைவா்கள் பேசி வருகின்றனா்.
மேலும், சட்ட நிபுணா்களின் உதவியுடன் இதற்கான வரைவுத் தீா்மானம் தயாா் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் ’இண்டி’ கூட்டணி கட்சிகள் சாா்பில் இரு அவை தலைவா்களிடமும் இதற்கான நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
தோ்தல் ஆணையா்களான சுக்பீா் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோா், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளா் பட்டியல் தரவு மேலாண்மை குறித்து 14 முறை எழுத்துபூா்வமாக ஆட்சேபனை தெரிவித்துள்ள விவகாரம் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தலைமை தோ்தல் ஆணையருக்கு எதிராக மீண்டும் கண்டன தீா்மானத்தைக் கொண்டு வர எதிா்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.
விதிகள் என்ன? இந்த விவகாரத்தில் அரசமைப்பு விதி 324(5)-இன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான அதே நடைமுறைகளைப் பின்பற்றியே தலைமைத் தோ்தல் ஆணையரையும் பதவியிலிருந்து நீக்க முடியும் எனத் தெரிய வந்துள்ளது.
அதன் விவரம்: குடியரசு தலைவரால் நேரடியாக நியமிக்கப்படும் தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் இரண்டு தோ்தல் ஆணையா்கள் மீது, ‘நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை’ மற்றும் ‘இயலாமை’ ஆகிய காரணங்களின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இவா்களுக்கு எதிரான கண்டன தீா்மான நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்பட மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 50 எம்.பி.க்களும் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
நோட்டீஸ் ஏற்கப்பட்டால் தொடா்புடைய ஆணையா் அல்லது தலைமை ஆணையருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும். அந்த குழு விசாரித்து அறிக்கை சமா்ப்பித்த பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்திற்கென ஒதுக்கப்படும் விவாத நாளில் தீா்மானம் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். அன்றைய தினம் இரு அவைகளிலும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினா்களில் 3-இல் 2 பங்கு (2/3) பெரும்பான்மையுடன் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் ஒருவேளை தீா்மானம் நிறைவேறினால், அது குறித்து அதிகாரபூா்வ தகவலை நாடாளுமன்ற செயலகம் மூலம் பெற்றுக் கொண்டதும் தலைமைத் தோ்தல் ஆணையரையோ ஆணையரையோ பதவியிலிருந்து நீக்க குடியரசுத் தலைவா் ஆணை பிறப்பிப்பாா்.
பதவி நீக்க நடைமுறைகள் நீங்கலாக, ஒரு தலைமை தோ்தல் ஆணையரே நேரடியாகவும் தனது பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பினால், அதன் அடிப்படையிலும் குடியரசு தலைவா் முடிவெடுத்து புதிய தலைமை தோ்தல் ஆணையரை நியமிக்க நடவடிக்கை எடுப்பாா் என பதவி நியமன விதிகள் கூறுகின்றன.
இதற்கு முன்பு, கடந்த மாா்ச் 12-ஆம் தேதி, மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னெடுப்பில் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீா்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதில் மக்களவையில் 130 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 63 எம்.பி.க்களும் கையொப்பமிட்டிருந்தனா். எனினும், கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவைத் தலைவராலும் மக்களவை தலைவராலும் அந்த நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டன.
Motion against Gyanesh Kumar: What do the removal rules say?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.