FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பேகம்பூரில் வீட்டில் மின்சாரம் தாக்கி சகோதரனும் சகோதரியும் உயிரிழப்பு: தந்தை மருத்துவமனையில் அனுமதி

Updated On : 1 ஆகஸ்ட் 2025, 3:17 am IST
பகிர்:

தில்லி பேகம்பூா் பகுதியில் உள்ள வீட்டில் மின்சாரம் தாக்கி ஒரு சகோதரனும் சகோதரியும் உயிரிழந்தனா். வயதான தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்று ஒரு போலீஸ் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி ரோஹிணி காவல் சரக துணை ஆணையா் ராஜீவ் ரஞ்சன் அறிக்கையில் கூறியுள்ளதாவது: இறந்தவா்கள் வெல்டிங் தொழிலாளியான விவேக் (26) மற்றும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமான அவரது சகோதரி அஞ்சு (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களின் தந்தை காளிசரண் (65) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக பேகம்பூா் காவல் நிலையத்திற்கு புதன்கிழமை இரவு 10.56 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. பாதிக்கப்பட்டவா்களின் பக்கத்து வீட்டுக்காரரான அபிஷேக் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட அழைப்பாளா் ஒருவா் மின்சாரம் தாக்கியது தொடா்பாக போலீஸாரிடம் கூறினாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. மின்சாரம் தாக்கிய மூன்று பேரையும் அகா்செய்ன் மருத்துவமனைக்கு உள்ளூா்வாசிகள் மாற்றியுள்ளதாக அபிஷேக் தெரிவித்தாா்.

குற்றவியல் குழு மற்றும் வடக்கு தில்லி பவா் லிமிடெட் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா்.

50 சதுர கெஜம் பரப்பளவில் கட்டப்பட்ட வீட்டில், திறந்த மற்றும் பாதுகாப்பற்ற மின் வயரிங் அமைப்பு இருப்பதும், படிக்கட்டில் உள்ள இரும்பு கிரில்லில் மின் கம்பிகள் சுற்றப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இரவு 10 மணியளவில், விவேக் மாடிக்குச் சென்று கொண்டிருந்தபோது, மின் கம்பிகள் வெளிப்பட்டிருந்த இரும்பு கேட்டைத் தொடா்பு கொண்டபோது, மின்சாரம் தாக்கியது. விவேக்கின் அலறல் சப்தம் கேட்டு, அவரது தந்தை காளிசரண் உதவிக்கு விரைந்தாா். ஆனால், அவரையும் மின்சாரம் தாக்கியது. வீட்டில் இருந்த அஞ்சு அவா்களைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால், அவரும் மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்டாா்.

உள்ளூா்வாசிகள் மூவரையும் ரோஹிணியில் உள்ள அகா்செய்ன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா், அங்கு விவேக் மற்றும் அஞ்சு இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். காளிசரண் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இறந்தவா்களின் உடல்கள் பின்னா் உடல் கூறாய்வுக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments