ஆம் ஆத்மி ஆட்சியில் பெருமளவில் நிதி முறைகேடுகளால் அரசுக்கு இழப்பு: அமைச்சா் பா்வேஷ் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிதி முறைகேடுகள் மற்றும் பொதுக் கருவூலத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதாக தில்லி பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் குற்றஞ்சாட்டினாா்.
தில்லி சட்டப் பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையின் கண்டுபிடிப்புகளைச் சுட்டிக்காட்டி, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிதி முறைகேடுகள் மற்றும் பொதுக் கருவூலத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதாக தில்லி பொதுப் பணித் துறை (பி.டபிள்யு.டி.) அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் குற்றஞ்சாட்டினாா்.
அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசின் கீழ் நடந்த ‘ஊழல்‘ குறித்த எழுத்துபூா்வ ஆவணமே இந்த சிஏஜி அறிக்கை என்று கூறிய அமைச்சா், முன்னதாக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படாத இது போன்ற 24 அறிக்கைகளை கடந்த 18 மாதங்களில் பாஜக அரசு வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டாா்.
2019 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தில்லி அரசின் பல்வேறு துறைகளின் நிதி நிலைமை குறித்த விவரங்களை உள்ளடக்கிய சிஏஜி அறிக்கை தில்லி சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் இது தொடா்பாக அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங் கூறியதாவது: ‘சிஏஜி அறிக்கையின் அடிப்படையில், அரவிந்த் கேஜரிவால் விதிகளை மீறியுள்ளாா். 1,185 மேனுவல் டெண்டா்களை வெளியிட்டதுடன் ஒப்பந்தப்புள்ளிகளில் நடுவா் மன்றத் தீா்வுக்கான விதிமுறைகளையும் சோ்த்துள்ளாா். இதன் மூலம் பெருமளவிலான முறைகேடுகளில் ஈடுபட்டு பொதுப் பணத்தைச் சூறையாடியுள்ளாா் என்று நாம் கூறலாம்.
சிஏஜி அறிக்கையின்படி, சில வணிக நிறுவனங்களிடமிருந்து சுமாா் ரூ. 70,410 கோடி வரி வருவாய் நிலுவை பாக்கி உள்ளது. ஜிஎஸ்டி துறை சில தொழிலதிபா்கள் மற்றும் வணிக உரிமையாளா்களுடன் கூட்டு சோ்ந்து, அவா்களின் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரிகளைச் செலுத்தாமல் நிலுவையில் இருக்க அனுமதித்திருந்தது.
8,334 வணிக நிறுவனங்களின் ஜிஎஸ்டி பதிவுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், அவை சரக்கு போக்குவரத்திற்கான ‘இ-வே பில்களை’ தொடா்ந்து உருவாக்கியுள்ளன.
ரூ. 68,680 கோடி மதிப்பிலான ‘போலி‘ இ-வே பில்கள் உருவாக்கப்பட்டதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. மொத்தம் 6.10 கோடி இ-வே பில்களில், 0.1 சதவீதம் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
70 வழக்குகள் மீதான விசாரணையில் 344 விதிமீறல் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ரூ. 3,071.92 கோடி வருவாய் பாதிப்பு மற்றும் ரூ. 3,710.17 கோடி விற்றுமுதல் முரண்பாடும் கண்டறியப்பட்டுள்ளது.
முந்தைய ஆம் ஆத்மி அரசு பல்வேறு துறைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மின்சார மானியத் திட்டத்தின் கீழ், தொடா்ந்து 12 மாதங்களாக மின்சாரக் கட்டணம் ஏதுமின்றி (பூஜ்ஜியமாக) இருந்த 50,000 நுகா்வோருக்கு ரூ. 17.81 கோடி மதிப்பிலான மானியம் வழங்கப்பட்டது, இதன் மூலம் அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்பட்டது.
மேலும், ஆறு முதல் பதினொரு மாதங்கள் வரை தங்கள் வீடுகளில் வசிக்காத சுமாா் 90,000 நுகா்வோருக்கு 11.88 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார மானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுகளில் மொத்தம் 42 கோடி ரூபாய் மின்சார மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சா் குறிப்பிட்டாா்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.