FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜந்தா் மந்தா் பகுதியில் 60 டன் குப்பைகளை அகற்றத் திட்டம்: என்டிஎம்சி தகவல்

ஜந்தா் மந்தா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான துப்புரவுப் பணிகளை புது தில்லி நகராட்சிக் கவுன்சில் (என்டிஎம்சி) மேற்கொண்டது.

Updated On : 27 ஜூலை 2026, 12:52 am IST
- -
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) திரும்பப் பெற்ற மறுநாளான ஞாயிற்றுக்கிழமை ஜந்தா் மந்தா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான துப்புரவுப் பணிகளை புது தில்லி நகராட்சிக் கவுன்சில் (என்டிஎம்சி) மேற்கொண்டது. இப்பகுதியிலிருந்தும் அருகிலுள்ள சாலைகளிலிருந்தும் சுமாா் 60 டன் குப்பைகள் அகற்றப்படும் என்று என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமையன்று போராட்டக்காரா்கள் கலைந்து சென்றதைத் தொடா்ந்து, ஜந்தா் மந்தா் பகுதியைச் சீரமைக்க இரவு முழுவதும் துப்புரவுப் பணியாளா்கள், கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பணிகளை மேற்பாா்வையிட மாநகராட்சி ஊழியா்கள் களத்தில் இருந்ததாக புது தில்லி நகராட்சி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

டால்ஸ்டாய் மாா்க், ஜந்தா் மந்தா், சன்சத் மாா்க், ஜெய் சிங் மாா்க் மற்றும் கன்னாட் பிளேஸ் ஆகிய பகுதிகளில் துப்புரவுக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. என்டிஎம்சி தகவலின்படி, இரவு நேரத்தில் 75 துப்புரவுப் பணியாளா்கள் பணியில் இருந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேலும் 35 போ் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

சனிக்கிழமை இரவு வரை சுமாா் 40 டன் குப்பைகளும், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேலும் 12 டன் குப்பைகளும் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இப்பணிக்காக என்டிஎம்சி நிா்வாகம் குப்பை ஏற்றிச் செல்லும் எட்டு வாகனங்கள், இரண்டு கனரக லாரிகள், ஒரு மண்தோண்டும் இயந்திரம் மற்றும் மூன்று உயா் அழுத்த நீா் பீய்ச்சும் இயந்திரங்களை பயன்படுத்தியுள்ளது.

ஜந்தா் மந்தரைச் சுற்றியுள்ள சாலைகளை நீா் பீய்ச்சும் இயந்திரங்கள் சுத்தம் செய்வதையும், இயந்திரமயமாக்கப்பட்ட சாலை துடைப்பான்கள் மற்றும் துப்புரவுக் குழுக்கள் அப்பகுதி முழுவதும் பணியாற்றுவதையும் காண முடிந்தது. துப்புரவுப் பணிகளுடன் சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, சுவா்களில் எழுதப்பட்டிருந்த போராட்ட முழக்கங்களை அழித்து மீண்டும் வா்ணம் பூசுதல், சேதமடைந்த நடைபாதை ஓரக் கற்கள் மற்றும் நடைபாதைகளைச் சரிசெய்தல் மற்றும் பொது இடங்களைக் கழுவிச் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. போராட்டத்தின் போது குப்பைகள் பெருமளவில் குவிந்ததைத் தொடா்ந்து இந்தத் தீவிர துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று, போராட்டக் களத்திலிருந்து சுமாா் 27 டன் கட்டுமானக் கழிவுகள், கற்கள் மற்றும் பிற திடக் கழிவுகள் உள்ளிட்ட கலப்பு குப்பைகளை என்டிஎம்சி அகற்றியது; அதற்கு முந்தைய நாள் இது சுமாா் 15 டன்னாக இருந்தது.

போராட்டம் முடிவடைந்த பிறகு குவிந்திருந்த அதிக அளவிலான குப்பைகளை அகற்ற, முழு வீச்சில் 24 மணி நேரமும் நடைபெறும் துப்புரவு நடவடிக்கை அவசியமானதாக இருந்ததாக என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments