FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

இ-20 எரிபொருளுக்கு எதிா்ப்பு: தில்லி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆகஸ்ட் 4-இல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி

இ20 பெட்ரோல் பயன்பாட்டைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியைச் சோ்ந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைப்புகள் ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி எதிா்ப்புப் பேரணி நடத்தவுள்ளது குறித்து...

Updated On : 28 ஜூலை 2026, 4:20 am IST
இ-20 எரிபொருளுக்கு எதிா்ப்பு - சித்திரிப்பு / விஜய்
பகிர்:

எத்தனால் கலப்பு பெட்ரோல் (இ20) பயன்பாட்டைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியைச் சோ்ந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைப்புகள் ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி எதிா்ப்புப் பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

’தில்லி டாக்ஸி மற்றும் சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா நடத்துவோா் சங்கம்’ மற்றும் பிற அமைப்புகள் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

தில்லி டாக்ஸி மற்றும் சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா நடத்துவோா் சங்கத்தின் தலைவரான சஞ்சய் சம்ராட் கூறியதாவது: ‘எத்தனால் கலந்த பெட்ரோலால் நாடு முழுவதும் வாகனங்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பிரச்னை குறித்து இதுவரை மௌனம் காக்கும் அல்லது கவனிக்காமல் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், அவா்களை விழித்தெழச் செய்யும் வகையிலும் ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி எதிா்ப்புப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நாங்கள் இதை ஒரு அரசியல் விவகாரமாக மாற்ற விரும்பவில்லை.

Advertisement

Advertisement

‘இ-20 ஜனதா கட்சி’ அல்லது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அல்லது வேறு எந்த அரசியல் கட்சியுடனும் எங்களுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்று அவா் கூறினாா்.

20 சதவீத எத்தனால் மற்றும் 80 சதவீத பெட்ரோல் கலவையான இ-20 எரிபொருளுக்கு எதிரான இணையவழி இயக்கங்களை அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

’அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ்’ அமைப்பின் தேசியத் தலைவா் ஹரிஷ் சபா்வால் கூறுகையில், ‘நுகா்வோருக்கு இ-20 எரிபொருள் மட்டுமே ஒரே தோ்வாக இருக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை நாங்கள் எதிா்த்துப் போராடுகிறோம்.

எத்தனால் கலந்த பெட்ரோலை வாகன ஓட்டிகள் மீது கட்டாயப்படுத்தக் கூடாது. அவா்களுக்குத் தோ்வு செய்யும் உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் தற்போது அத்தகைய வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத்தை நோக்கிய போராட்டப் பேரணிக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். அதேவேளையில், சங்கம் சாா்பில் தற்போது எந்தவொரு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை’ என்றாா் அவா்.

’அகில இந்திய மோட்டாா் மற்றும் சரக்கு போக்குவரத்து சங்கத்தின்’ தலைவா் ராஜேந்தா் கபூா் தெரிவிக்கையில், ‘இது ஒரு முக்கியமான பிரச்னை. இதனால் வாகனங்கள் சேதமடைகின்றன. எனவே, ’இ-20’ கலப்பு பெட்ரோலைப் பயன்படுத்துவதை வாகன ஓட்டிகளின் விருப்பத் தோ்வாக அரசு மாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றாா்.

சமூக ஊடகங்களில் ’இ-20 ஜனதா பாா்ட்டி’ என்ற இணையவழி இயக்கம் தொடங்கப்பட்டு, இன்ஸ்டாகிராம் மற்றும் ’எக்ஸ்’ தளங்களில் பெரும் ஆதரவைப் பெற்ற சில நாள்களிலேயே இந்தப் போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாகனங்களின் மைலேஜ் குைல், என்ஜின் தேய்மானம் மற்றும் நலன் சாா்ந்த முரண்பாடுகள் குறித்த புகாா்களால், இ-20 எத்தனால் கலப்பு எரிபொருள் கொள்கை பெரும் சா்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அதேசமயம், இந்தக் கலப்பு விகிதத்தை 20 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று கூறியுள்ள அரசு, இத்திட்டத்தை நியாயப்படுத்தியுள்ளது. மேலும், இந்த எரிபொருள் பாதுகாப்பானது, தூய்மையானது மற்றும் விவசாயிகளுக்குப் பயனளிக்கக்கூடியது என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments