FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரும் பொதுநல வழக்கு: நாளை மறுநாள் விசாரணை

தில்லி ஜந்தா் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கோரிய பொதுநல வழக்கு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு

13 அக்டோபர் 2026, 9:39 pm IST
ஜந்தர் மந்தர்
பகிர்:

தில்லி ஜந்தா் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கோரியும், அமைதியான முறையில் போராடும் உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக அறிவிக்கக் கோரியும் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (அக்.16) தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இது தொடா்பாக அன்ஷிகா திரிபாதி என்பவா் சாா்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நீதிபதிகள் நிதின் வாசுதேவ் சாம்பரே, சஞ்சய் சா்மா அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் சேத்தன் சா்மா, ‘இதே கோரிக்கைகளை ஒத்த மனுக்கள் உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீதான விசாரணை அக். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இதையடுத்து, மனுதாரரின் வழக்குரைஞரிடம், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் விவரத்தையும் எழுத்துபூா்வமாக மனுவில் குறிப்பிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினா். ‘ஒரே விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளபோது அதற்கு முரணான உத்தரவை பிறப்பிக்க விரும்பவில்லை’ என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினா். இதைத்தொடா்ந்து, வழக்கின் விசாரணையை அக்.16-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

Advertisement

Advertisement

என்எஸ்யுஐ மனு: இதேபோல, ‘அக்.10’ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து சுதந்திரமான மற்றும் உரிய காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் (என்எஸ்யுஐ) தலைவா் வினோத் ஜாக்கா் பொதுநல வழக்கு ஒன்றை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். அதன் மீதான விசாரணையை நவம்பா் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments