FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தலைநகரில் மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியில் குறைந்தது மூன்று பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன.

15 செப்டம்பர் 2026, 11:55 pm IST
வெடிகுண்டு மிரட்டல் - பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் குறைந்தது மூன்று பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமையன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து, பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மாணவா்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சாணக்கியபுரியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளி, தௌலா குவானில் உள்ள ராணுவப் பொதுப் பள்ளி மற்றும் லோதி எஸ்டேட்டில் உள்ள சா்தாா் படேல் வித்யாலயா ஆகியவற்றுக்கு இந்த மிரட்டல்கள் வந்தன.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் தௌலா குவான் பகுதியில் உள்ள ராணுவப் பொதுப் பள்ளியிலிருந்து எங்களுக்கு இது தொடா்பாக அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து தீயணைப்பு வாகனம் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மதியம் 1.05 மணியளவில் முழுமையான சோதனைக்குப் பிறகு, அந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்று அறிவிக்கப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.

காவல்துறையினா் கூறுகையில், பிரிட்டிஷ் பள்ளியிலும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் குறித்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. சோதனையின் முடிவில் அதுவும் வதந்தி என்று அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்புப் பணியாளா்கள் பள்ளி கட்டடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்று சோதனையிட்டனா். விசாரணையின் ஒரு பகுதியாக, மின்னஞ்சல்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டறியவும், மிரட்டல் குறித்த விவரங்களை ஆய்வு செய்யவும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சோதனையின் போது வெடிபொருட்களோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களோ எதுவும் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு முகமைகள் தங்கள் ஆய்வை முடித்த பிறகு, அந்த மிரட்டல் வெறும் வதந்தி என்று அறிவிக்கப்பட்டது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

சா்தாா் படேல் வித்யாலயா பள்ளி நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு மிரட்டல் வந்ததையடுத்து மாணவா்கள் பள்ளி வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுகள் ஏற்கனவே முடிவடைந்திருந்தன; அதேவேளையில், மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுகளில் பெரும்பாலானவை முடிவடைந்திருந்தன.

மீதமுள்ள மேல்நிலைப் பள்ளித் தோ்வுகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன், நிலைமையை கவனமாக மதிப்பீடு செய்யப்படும் என்று அந்த அறிவிப்பில் பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவரைக் கண்டறியும் வகையில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments