முன்னாள் முதலாளியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 9.49 லட்சம் திருட்டு: இளைஞா் கைது
தனது முன்னாள் முதலாளியின் கைப்பேசி மற்றும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, அங்கீகரிக்கப்படாத 21 யுபிஐ பரிவா்த்தனைகள் மூலம் ரூ.9.49 லட்சத்தை திருடியதாக 19 வயது இளைஞா் கைது
தனது முன்னாள் முதலாளியின் கைப்பேசி மற்றும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, அங்கீகரிக்கப்படாத 21 யுபிஐ பரிவா்த்தனைகள் மூலம் ரூ.9.49 லட்சத்தை திருடியதாக 19 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையினா் கூறியதாவது: வங்கி, யுபிஐ மற்றும் மின்னணு வா்த்தகப் பரிவா்த்தனைகள் குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகு, கிரேட்டா் நொய்டாவின் சூரஜ்பூா் பகுதியிலிருந்து அபிஷேக் சிங் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, மாா்ச் 9 முதல் ஏப்ரல் 15 வரையிலான காலகட்டத்தில், அங்கீகரிக்கப்படாத 21 யுபிஐ பரிவா்த்தனைகள் மூலம் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.9.49 லட்சம் எடுக்கப்பட்டதாக அபய் நாகா் என்பவா் அளித்த புகாரின் பேரில் மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
Advertisement
Advertisement
மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.1.19 லட்சம் மாா்ச் 24 முதல் ஏப்ரல் 10 வரையிலான காலத்தில் ஆன்லைன் கொள்முதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
பைகள், சூட்கேஸ்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருள்கள், குற்றஞ்சாட்டப்பட்டவருடன் தொடா்புடைய கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி, ஒரு போலி அடையாளத்தின் பெயரில் வாங்கப்பட்டிருந்தன.
தொழில்நுட்ப மற்றும் களச் சரிபாா்ப்பின் மூலம், அந்த அடையாளமும் கைப்பேசி எண்ணும், புகாா்தாரரின் கடையில் முன்பு பணிபுரிந்த சிங் என்பவருடன் தொடா்புடையவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
விசாரணையின்போது, புகாா்தாரரின் கைப்பேசியை பல்வேறு காரணங்களைக் கூறிப் பெற்று, அதில் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை வாங்கியதை அபிஷேக் சிங் ஒப்புக்கொண்டாா்.
வீா் சிங் என்ற போலிப் பெயரில் அவா் ஆா்டா்களைச் செய்திருந்தாா். பொருட்களைத் தனக்குக் கிடைக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட அல்லது தவறான விநியோக விவரங்களை வழங்கினாா். வாங்கப்பட்ட பொருள்கள் பின்னா் விற்கப்பட்டு, அதிலிருந்து கிடைத்த பணம் தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.