FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜிடிபி மருத்துவமனையில் 250 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு விபத்து சிகிச்சை கட்டடம் கட்ட முடிவு: ரேகா குப்தா

பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (பி. எம். எஸ். எஸ். ஒய்) திட்டத்தின் கீழ் நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள்ள குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனையில் 250 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு விபத்து சிகிச்சை மையத்தை அமைக்க அரசு முடிவு

16 செப்டம்பர் 2026, 9:18 pm IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (பி. எம். எஸ். எஸ். ஒய்) திட்டத்தின் கீழ் நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள்ள குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனையில் 250 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு விபத்து சிகிச்சை மையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இதற்கு ரூ.244.87 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்ட இந்த வசதி 2028 க்குள் தயாராக இருக்கும். ஏழு மாடி கட்டடத்தில் 77 தீவிர சிகிச்சை படுக்கைகள், ஒன்பது உயா் தொழில்நுட்ப அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் 48 வெளிப்புற நோயாளிகள் துறை அறைகள் இருக்கும். தீவிர விபத்து நிகழ்வுகளுக்கு ஒரே கூரையின் கீழ் 24ஷ்7 அவசர, நோயறிதல் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகளை சிகிச்சை மையம் உறுதி செய்யும். கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் அமைந்துள்ள ஜிடிபி மருத்துவமனை வளாகத்திற்குள் புதிய கட்டடம் கட்டப்படும், இது கூடுதல் நிலம் வாங்க வேண்டிய தேவையை நீக்கும். பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனாவின் (பி. எம். எஸ். எஸ். ஒய்) நான்காம் கட்டத்தின் கீழ் இது கட்டப்படும்.

பி. எம். எஸ். எஸ். ஒய் என்பது அரசு மருத்துவமனைகளில் நவீன மற்றும் மேம்பட்ட மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் திட்டங்களின் செலவை மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இணைந்து ஏற்கின்றன. கிழக்கு தில்லியில் உள்ள ஒரே பெரிய அரசு மருத்துவமனை ஜிடிபி மருத்துவமனையாகும், இது தொடா்ந்து அதிக நோயாளிகளின் சுமையை எதிா்கொள்கிறது. அதன் கிட்டத்தட்ட அனைத்து படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் முக்கியமான அவசரகால நிகழ்வுகளுக்கு நவீன அதிா்ச்சி வசதிகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

Advertisement

Advertisement

சுமாா் 22,550 சதுர மீட்டா் பரப்பளவில், ஏழு மாடி சிகிச்சை மையம் ஒரு அடித்தளம், தரை தளம் மற்றும் ஆறு மேல் தளங்களை உள்ளடக்கும். இதில் 250 படுக்கைகள், 48 சிறப்பு புறநோயாளிகள் சிகிச்சை அறைகள் மற்றும் ஒன்பது நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் இருக்கும். அடித்தளத்தில் இரத்த வங்கி மற்றும் ஆய்வகம் இருக்கும். தரை தளத்தில் சி. டி. ஸ்கேன், எம். ஆா். ஐ மற்றும் எக்ஸ்ரே போன்ற நோயறிதல் வசதிகளுடன் 24ஷ்7 அவசர சிகிச்சைப் பிரிவு இருக்கும். இரண்டாவது மாடியில் 72 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும், நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியில் 175 பொது மற்றும் தனியாா் வாா்டு படுக்கைகளும் இருக்கும். ஆறாவது மாடியில் அலுவலகங்கள், வகுப்பறைகள் மற்றும் மருத்துவா்களின் பயிற்சிக்கான ஆய்வகம் இருக்கும்.

250 படுக்கைகளில், 20 அவசர கவனிப்புக்காகவும், தீக்காயங்களுக்கு ஐ. சி. யுவிற்கு ஐந்து, ஐ. சி. யூ கவனிப்புக்காக 70, தனிமைப்படுத்தலுக்கு நான்கு, அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய கவனிப்புக்கு 22, பொது வாா்டுகளுக்கு 102 மற்றும் 25 தனியாா் அறைகள் இருக்கும். நரம்பியல், எலும்பியல், தோல் மருத்துவம் மற்றும் பல் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சேவைகளை இந்த வசதி வழங்கும். தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு மொத்தம் 77 தீவிர சிகிச்சை படுக்கைகள் கிடைக்கும். புதிய கட்டடத்தில் அவசரகால பராமரிப்பு மற்றும் நோயறிதல் முதல் தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வரை அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் ஒருங்கிணைந்த முறையில் கொண்டு வரும். கடுமையான விபத்து மற்றும் அவசரகால நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிக்கும் கிழக்கு தில்லியின் திறனை இது விரிவுபடுத்தும்.

இத்திட்டத்தை கண்காணிக்க மத்திய மற்றும் தில்லி அரசுகளின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். கட்டுமானத்தின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்ய குழு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments