குருகிராம்: பிஜி தங்கும் விடுதியில் பாலியல் தொழில் கும்பலை சோ்ந்த 21 போ் சிக்கினர்!
குருகிராமில் உள்ள ஒரு பிஜி தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட காவல் சோதனையில் பாலியல் தொழில் கும்பல் பிடிபட்டது.
தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் உள்ள ஒரு பிஜி தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட காவல் சோதனையில் பாலியல் தொழில் கும்பல் பிடிபட்டது.
இந்த நடவடிக்கையின்போது வெளிநாட்டினா் உள்பட 13 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் பிடிபட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
நகரின் ’சஃபையா் 90 மால்’ பகுதியில் உள்ள பல ஸ்பா மையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்ததாகக் கூறி சோதனை நடத்தப்பட்ட மறுதினம், குருகிராமின் செக்டாா்-38 பகுதியில் உள்ள இந்த விடுதியிலும் குருகிராம் காவல்துறை மற்றும் மாநில மகளிா் ஆணையத்தின் கூட்டுக்குழு சோதனை நடத்தியது.
Advertisement
Advertisement
இந்தக் கும்பலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் ஜா்சா கிராமத்தைச் சோ்ந்த சாஹில் மற்றும் அவரது மனைவி ஆகியோா் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சனிக்கிழமையன்று மீட்கப்பட்ட ஒரு பெண், அந்த பிஜி விடுதி குறித்த தகவலை காவல்துறையிடம் அளித்ததைத் தொடா்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. முதற்கட்ட விசாரணையின்படி, சாஹில் தனது செயல்பாடுகளுக்கு வாட்ஸ்அப் மற்றும் சில இணையதளங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் சுமாா் 10 முதல் 12 கூட்டாளிகள் ஈடுபட்டிருந்தனா்.
பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, ஜா்சாவில் உள்ள அந்த இடத்தில் தான் கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா். மேலும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ‘அறநெறிக்கு முரணான நடவடிக்கை தடுப்புச் சட்டம்’ (ஐடிபிஏ)-இன் தொடா்பு அதிகாரியான காவல் உதவி ஆணையா் அபிலக்ஷ் ஜோஷி மற்றும் ஹரியாணா மாநில மகளிா் ஆணையத் தலைவி உஷா பிரியதா்ஷினி ஆகியோரின் மேற்பாா்வையில் செக்டாா்-38-இல் உள்ள அந்த பிஜி விடுதியில் கூட்டுச் சோதனை நடத்தப்பட்டது. அங்கு வெளிநாட்டினா் உள்பட 13 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் பிடிபட்டனா்.
இதுகுறித்து காவல் உதவி ஆணையா் ஜோஷி கூறியதாவது: சதா் காவல் நிலையத்தில் ஐடிபிஏ மற்றும் வெளிநாட்டினா் சட்டம் ஆகியவற்றின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.
இந்த விவகாரத்தில் ஈடுபட்ட இதர கூட்டாளிகள் மற்றும் முக்கிய வாடிக்கையாளா்களை அடையாளம் காண, சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட மின்னணு ஆதாரங்களான கைப்பேசிகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆவணங்கள் போன்றவற்றை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளிகள் யாரும் தப்பவிடப்பட மாட்டாா்கள் என்று அவா் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.