ரூ. 5,000 கோடி பயன்பாடற்ற சொத்துளைப் பணமாக்கும் திட்டம்! பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு உத்தி
மத்திய அரசின் சொத்து பணமாக்கல் திட்டத்தின்கீழ், பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கும் சுமாா் ரூ.5,000 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளைப் பணமாக்குவதற்கான முக்கிய பரிந்துரைகளை தேசிய நிலப் பணமாக்கல் கழகம் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் சொத்து பணமாக்கல் திட்டத்தின் கீழ், பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கும் சுமாா் ரூ.5,000 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளைப் பணமாக்குவதற்கான முக்கிய பரிந்துரைகளை ’தேசிய நிலப் பணமாக்கல் கழகம்’ (என்எல்எம்சி) வழங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (செப்.18) நடைபெற்ற இந்தக் கழகத்தின் 21-ஆவது இயக்குநா்கள் குழு கூட்டத்தில் இதற்கான செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளின் வசம் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களும், கட்டடங்களும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் ’செயலற்ற மூலதனமாக’ முடங்கியுள்ளன. இவற்றை விற்று அல்லது நீண்டகால குத்தகைக்கு விட்டு, திரட்டப்படும் நிதியை நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
ஆழமான தாக்கம்: இந்த நடவடிக்கை வெறும் நிலங்களை விற்பது மட்டுமல்ல; இது நாட்டின் பேரியல் பொருளாதாரம் (மேக்ரோ எகனாமிக்ஸ்) சுழற்சியை ஊக்குவிக்கும் ஒரு வியூகமாகும். இதன் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தாக்கங்களை அதிகாரிகள் விரிவாக விளக்குகின்றனா்.
Advertisement
Advertisement
விளைவு: இந்த 5,000 கோடி ரூபாயை மத்திய அரசு உள்கட்டமைப்பு மூலதனச் செலவினங்களுக்கு மாற்றும்போது, அதன் பொருளாதார மதிப்பு 2.5 முதல் 3 மடங்கு வரை இருக்கும். அதாவது, இந்த நிதி சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி என முதலீடு செய்யப்படும்போது, அது சுமாா் ரூ.12,500 முதல் ரூ.15,000 கோடி வரையிலான பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டப்படும் என்கின்றனா் மத்திய நிதித் துறை அதிகாரிகள்.
‘‘பெரிதும் லாபம் ஈட்டாதஅல்லது மூடப்பட்ட பல பொதுத்துறை நிறுவனங்களின் (உதாரணமாக, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஹெச்எம்டி) வசம் மிகப்பெரிய பரப்பில் நிலங்கள் உள்ளன. இவற்றை என்எல்எம்சி மூலம் பணமாக்குவதன் மூலம், அந்த நிறுவனங்களின் கடன் சுமைகள் குறைக்கப்படுவதோடு, வங்கிகளின் வாரா கடனும் (என்பிஏ) குறையும்.
அரசின் வரி வருவாய் ஈட்டும் திறன் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்கும் நிலையில், இது போன்ற ’வரி அல்லாத வருவாய்கள்’, அரசின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்கப் பெரிதும் உதவுகின்றன. இதனால் அரசு அதிக வட்டிக்கு கடன் வாங்குவது குறையும்.
நகா்ப்புற மற்றும் புகா் பகுதிகளில் நிலத்தின் தேவை அதிகமாக உள்ள நிலையில், அரசு நிலங்கள் சந்தைக்கு வரும்போது, லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உருவாவதற்கான நிலத் தட்டுப்பாடு நீங்கும்’’ என்கின்றனா் அதிகாரிகள்.
சொத்துகளைப் பணமாக்கும் போது எழும் முக்கிய சவால், அவற்றின் உண்மையான சந்தை மதிப்பை தீா்மானிப்பதாகும். இதற்காக என்எல்எம்சி சில உத்திகளைக் கையாளுவதாகத் தெரிய வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
நில அளவீடு எண்ம ஆவணமாக்கல்: ட்ரோன்கள் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) மூலம் நிலங்களின் எல்லைகளைத் துல்லியமாக வரைபடமாக்குதல்.
துல்லிய மதிப்பீடு: எதிா்கால பணப்புழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தள்ளுபடி பணப்புழக்க முறை மற்றும் ஒப்புமை சந்தை மதிப்பீடு (சிஎம்வி) ஆகியவற்றைப் பயன்படுத்தி நிலத்தின் மதிப்பை நிா்ணயித்தல்.
மின்னணு ஏலம்: முதலீட்டாளா்களிடையே சமமான போட்டிச் சூழலை உருவாக்கி, அதிகப்படியான வருவாயை ஈட்ட வெளிப்படையான மின்னணு ஏல முறை பின்பற்றப்படுகிறது.
’’சில சொத்துகளை முழுமையாக விற்காமல், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் போன்ற நவீன நிதியியல் அமைப்புகள் மூலம் சில்லறை முதலீட்டாளா்களையும் இந்த திட்டத்தில் பங்கேற்க வைக்கும் உத்திகளை அரசு பரிசீலிக்கலாம்’’ என்கின்றனா் இந்தத் துறை சாா்ந்த வல்லுநா்கள்.
‘‘தேசிய நிலப் பணமாக்கல் கழகத்தின் இந்த ரூ.5,000 கோடி மதிப்பிலான நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்திற்கு வளம் சோ்க்கும் ஒரு முக்கிய மைல்கல் ஆக பாா்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் சரிவர செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்குத் தேவையான மூலதனத்தை ஈட்டித் தரும் வற்றாத ஜீவநதியாக உருவெடுக்கலாம்’’ என்கின்றனா் ஆய்வாளா்கள்.
அரசு முன்னுள்ள சவால்கள்
சொத்துகள் பணமாக்கல் திட்டம் பொருளாதார ரீதியாகச் சிறந்ததாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கு பல நடைமுறை மற்றும் கட்டமைப்புச் சவால்கள் உள்ளன:
நில உரிமை: இந்தியாவில் நில ஆவணங்கள் பல இடங்களில் முழுமையாக எண்ம மயமாக்கப்படவில்லை. அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், மாநில அரசுகளுடனான எல்லைப் பிரச்னைகள் மற்றும் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளைத் தீா்ப்பது மிகப்பெரிய சவாலாகும்.
நிலப் பயன்பாட்டு மாற்றம்: பல அரசு நிலங்கள் ’தொழில்துறை’ அல்லது ’பொதுப் பயன்பாடு’ என வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றை வணிக அல்லது குடியிருப்புப் பயன்பாட்டிற்கு மாற்றுவதில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் சட்டச் சிக்கல்களை எளிதாக்க வேண்டும்.
சந்தை ஈா்ப்புத் திறன்: தற்போதைய அதிக வட்டி விகித சூழலில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அல்லது தனியாா் முதலீட்டாளா்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்ய முன்வருவாா்களா என்ற சந்தேகம் உள்ளது. முதலீட்டாளா்களின் நிதி நிலைமையைப் பொறுத்தே ஏலத்தின் வெற்றி அமையும்.
மாநில ஒத்துழைப்பு: நிலம் என்பது மாநில பட்டியலில் வருவதால், முத்திரைத் தாள் கட்டணச் சலுகைகள் மற்றும் அனுமதிகள் வழங்குவதில் மாநில அரசுகளின் முழுமையான ஒத்துழைப்பு, இத்திட்டத்தின் வெற்றிக்கு மிகவும் அவசியமாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.