FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அன்று அரசியலால் தாமதமான அன்னை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

அரசியல் காரணமாகத் தாமதமான 1995 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக வெளியான செய்திக்கட்டுரை தினமணியின் கருவூலத்திலிருந்து...

12 செப்டம்பர் 2026, 10:21 pm IST
தினமணி கதிர் முகப்பும் பக்கமும்... - தினமணி கருவூலத்திலிருந்து...
பகிர்:

ஆலயங்களைச் சுற்றியிருப்பது ஆன்மிகம்தான் என்றாலும் அரசியலும் எப்போதும்  இருந்து கொண்டுதானிருக்கிறது. மன்னராட்சிக் காலத்தில் எப்படியோ, மக்களாட்சிக்  காலத்தில் அரசியல் இல்லாமல் ஆலயங்கள் மட்டும் அல்ல; வேறு எதுவுமேயில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்கது மட்டுமின்றி - தமிழ்நாட்டு ஆலயங்களில் அழகானதுமான -  அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலும் இதற்கு விலக்கு அல்ல.

இறை உறையும் திருக்கோயில்களுக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. கடைக்காலப் பாண்டிய மன்னர்களாலும், பிற்கால நாயக்க மன்னர்களாலும் கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு அவ்வப்போது மன்னர்களும் மக்கள் சமுதாயமும் கும்பாபிஷேகத் திருப்பணி செய்வித்துள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டுக்கு முன் நடந்த கும்பாபிஷேகங்கள் பற்றிச் சரியான தகவல்கள் இல்லை. ஆனால், 1923-ம் ஆண்டில் ஒரு கும்பாபிஷேகம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டு வருகிறது; இந்த கும்பாபிஷேகம் தொடர்பான சான்றுகள் எங்கிருந்து பெறப்பட்டன? என்று தெரியவில்லை. அடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 1963-ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப் பெற்றது. உண்மையிலேயே இது மகா கும்பாபிஷேகம்தான். ஏனெனில், நீண்ட இடைவேளைக்குப் பின், மிகத் தேர்ந்த மனிதர்களைக் கொண்ட  திருப்பணிக் குழுவின் பொறுப்பில், நடந்ததால் முழு அளவில் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

Advertisement

Advertisement

பின்னர் 1974-ல் சற்றுச் சுருக்கமாகப் பராமரிப்பின் பொருட்டுக் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1986-ல் அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலாவது கும்பாபிஷேம் நடத்தப் பெற்றிருக்க வேண்டும். ஆனாலும் தாமதம்; நடைபெறவில்லை.

1989-ல் தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைத்ததும் மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காகப் (பின்னாளில் திமுக ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவைத் தலைவராகவும் ஹிந்து அறநிலையத் துறை அமைச்சராகவும் இருந்த) பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தலைமையில் திருப்பணிக் குழு அமைக்கப்பட்டது. கோவில் திருப்பணிகளும் தொடங்கின. ஆனால், அடுத்து, 1991-ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, தி.மு.க.வைச் சார்ந்தவர் என்று கருதியோ என்னவோ பழனிவேல் ராஜன் தலைமையிலான குழுவைக் கலைத்துவிட்டது.

இத்தனைக்கும் அந்த நேரத்தில், பழனிவேல் ராஜன் குழுவால் முடிவு செய்யப்பட்டுத் தொடங்கப்பட்ட  மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலுவின் நன்கொடையிலான தெற்கு ராஜகோபுரத் திருப்பணியும் ஆயிர வைசிய மக்கள் சமூகத்தின் சார்பிலான மேற்கு ராஜகோபுரத் திருப்பணியும் நிறைவடையும் தறுவாயில் இருந்தன. கிழக்கு அம்மன் (சிவகங்கை) கோபுரத்துக்குச் சாரம் மட்டும் கட்டப்பட்டிருந்தது. குறிப்பிடும்படியாக, வேறெந்தப் பணியும் தொடங்கப்பெறாத நிலையில், விரைவில் மீண்டும் திருப்பணிக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதைய தமிழக அறநிலையத் துறை அமைச்சர் நடேசன் பால்ராஜ்.

மதுரைக் கோவிலின் அன்னை மீனாட்சியும் சுந்தரேசுவரரும்கூட சுற்றுப்புற அரசியல் சூழலில் சிக்கிக் கும்பாபிஷேகத்துக்காகக் காத்துக் கிடக்க நேரிட்டபோது, 1963-ல் நடந்த  கோயில் கும்பாபிஷேகப் பணிகளில் பெரும் பங்காற்றிய ‘தினமணி’ நாளிதழின் இணைப்பான தினமணி கதிரில் ‘அரசியல் சிக்கலில் மதுரை மீனாட்சி! கும்பாபிஷேகம் எப்பொழுது?’ என்ற அட்டைப்பட சிறப்புச் செய்திக் கட்டுரை வெளியானது. தொடர்ந்து, கும்பாபிஷேகப் பணிகள் விரைவு பெற்றன. 1995, ஜூலை 7 ஆம் தேதி வெகுவிமரிசையாக கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

குடமுழுக்கு வரலாற்றைக் கூறும் அந்தச் செய்திக் கட்டுரையின் பகுதிகள் இங்கே மீள்பிரசுரமாக:

(இடமிருந்து) கி. பழநியப்பனார், லெ. நாராயணன் செட்டியார், பழனிவேல் ராஜன், கனகய்யா... - தினமணி கருவூலத்திலிருந்து...

கும்பாபிஷேகத்துக்காக கோவில் காத்திருக்கும் இந்த வேளையில், 1963-ல் மகா கும்பாபிஷேகத்தை நடத்திய தமிழவேள் பி.டி.ராஜன் தலைமையிலான திருப்பணிக் குழுவில் உறுப்பினராக இருந்து, அவரது வலதுகரமாகச் செயல்பட்டவரான கி. பழநியப்பனாரைச் சந்தித்தோம்.

எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருப்பணிகளைச் செய்ய வேண்டும் என்று கூறிய எண்பத்தைந்து வயதுப் பெரியவரான அவர், அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தார்.

உண்மையிலேயே அது ஒரு மாபெரும் திருப்பணிதான். பல கும்பாபிஷேகங்கள் நடந்துள்ள போதிலும் அப்போதுதான். மீனாட்சியம்மன் கோவில் வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத அளவுக்கு, சுதை வேலைப்பாடுகள் நிறைந்த 12 கோபுரங்களும், இரு விமானங்களும் புதுப்பிக்கப்பெற்றன.

திருப்பணி தொடங்கியபோது கோபுரச் சுதை வேலைகளுக்கான ஸ்தபதிகள் கிடைக்கவில்லை. அவர்களைத் தேடிப்பிடித்துத் திரட்டி, சிற்பங்களை எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டும். சித்திரமாகத் தீட்டிக்கொண்டும்தான் வேலைகளைத் தொடங்கினோம். கோபுர வேலைகள் முடிந்தபோது, வண்ணம் தீட்டுவதா, வேண்டாமா என்பதில் சர்ச்சை.

பொறியியலாளர்களின் கருத்துப்படி வண்ணம் தீட்ட முடிவு செய்தபோது, பளபளப்பாகவா, Mat finish ஆகவா என்று பிரச்சினை. பின்னர் மேல ஆடி வீதியிலுள்ள சுவாமி, அம்மன் கோபுரங்களுக்கு இரு மாதிரியும் தீட்டி, மக்கள் கருத்தறிந்து, லேசான பளபளப்புடன் வண்ணம் தீட்ட முடிவு செய்தோம்” என்றார் அவர்.

இந்தத் திருப்பணிக் குழுக் காலத்தில்தான் கோவிலில் முதன்முதலில் தமிழில் அர்ச்சனை அறிமுகப்படுத்தப்பட்டது என்ற அவர், கும்பாபிஷேகத்துக்குப் பிறகும் சுமார் பத்தாண்டுகள் திருப்பணிக் குழு செயல்பட்டது. அப்போதுதான் ஆயிரங்கால் மண்டபம் கலைக்கூடமாக்கப்பட்டது. கோவில் வரலாற்று நூல்கள் வெளியிடப்பட்டன. நிறைவாக, 1972-ல் மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம் சாத்தப்பட்டது என்றும் பழநியப்பனார் குறிப்பிட்டார். தற்போதைய நிலை குறித்து வருந்திய அவர், கோவிலைச் சுற்றிலும் 'ஸ்தல விருட்ச'மான கடம்ப மரங்களை நடுமாறு யோசனை கூறினார்.

அடுத்த 12-ஆவது ஆண்டுத் தொடக்கத்தில் 1974-ல் திருப்பணிக்கென்று ஒரு குழு அமைக்காமலேயே கும்பாபிஷேகத்தை நடத்தினார் அப்போதைய கோவில் அறங்காவலர் குழுவின் தலைவரும் தொழிலதிபருமான லெ. நாராயணன் செட்டியார்.

லெ. நாராயணன் செட்டியாரைச் சந்தித்தபோது, “அம்பாளுக்கும். சுவாமிக்கும் அஷ்டபந்தனம், சுவர்ண பந்தனம் செய்ததும், கோவில் முழுவதும் மேல் தளத்தில் (சுமார் 10 ஏக்கர் பரப்பு, சுமார் ரூபாய் 8 லட்சம் முதல் 10 லட்சம் செலவில்) தட்டோடு பதித்ததும்தான் அந்த கும்பாபிஷேகத்தின் பெரும் பணி.

அம்பாளுடைய பாதத்தில் அமைந்துள்ள பத்மபீடத் தகட்டினுள் அபிஷேகத் திரவியங்கள் கசிந்து சென்றுகொண்டிருந்தன. இதைச் சரிசெய்யும் வகையில் அம்மனுக்கு மருந்து சாத்தி (அஷ்டபந்தனம்), தங்கக் கவசம் (சுவர்ண பந்தனம்) இட்டோம். மரபுப்படி, சுவாமிக்கும் சுற்றுப்பரிவார மூர்த்திகளுக்கும் மருந்து சாத்தப்பட்டது” என்றார் அவர்.

[அஷ்டபந்தனம் - கருவறையைப் பேணும் வகையில், கும்பாபிஷேகத்தின்போது, பீடங்களின் மீது நிலைப்படுத்தப்பட்டிருக்கும் தெய்வத் திருமேனிகள் ஆடாமல், அசையாமல் உறுதியாக நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக அஷ்டபந்தனம் என்ற மருந்து சாத்துவது மரபு, கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுப் பொருள்களும் சேர்ந்த ரசாயனக் கலவைதான் இந்த மருந்து – அஷ்டபந்தனம்].

“பக்தர்களால் உண்டியலில் போடப்படும் பணமும், பொருளும் கோவில் பராமரிப்புக்காகத்தான். 12 ஆண்டுகளில் திரளும் பணமே கும்பாபிஷேகத்துக்குப் போதுமானது. யாரையும் எதிர்பார்க்க வேண்டாம். உண்டியல் பணத்தை அங்கு இங்கு என டெபாசிட் செய்வதையும், பிற இனங்களுக்கு வழங்குவதையும் விடுத்து. கோவிலைப் பராமரித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்” என்ற லெ.நாராயணன் செட்டியார், அவசியம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப் பெற வேண்டும். இல்லாவிட்டால் தோஷம் என்றும் வலியுறுத்தினார்.

திருப்பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் கலைக்கப்பட்ட குழுவின் தலைவரும், 1963 மகா கும்பாபிஷேகத் திருப்பணிக் குழுத் தலைவர் பி.டி. ராஜன் மகனுமான (கடந்த திமுக அமைச்சரவையில் இடம்பெற்ற பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தந்தை) பிடிஆர் பழனிவேல் ராஜனைச் சந்தித்தபோது மிகத் தெளிவாகச் சொன்னார்:

“மீனாட்சியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதில் எந்தச் சிரமுமே இல்லை. மொத்தம் ஒன்றரைக் கோடி ரூபாய் செலவாகலாம். ஏன் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைக்குத் தொடங்கினால்கூட, ஒரு வருஷத்தில் கும்பாபிஷேகம் நடத்திவிடலாம்.

தெற்கு, மேற்கு ராஜகோபுரத் திருப்பணிகள் அனேகமாக முடிந்துவிட்டன. மற்ற எட்டு உள் கோபுரங்களுக்கும் இரு விமானங்களுக்கும்கூட, எங்கள் திருப்பணிக் குழுக் காலத்திலேயே உபயதாரர்களை நிர்ணயித்துவிட்டோம். மீதியிருப்பது வடக்கு, கிழக்கு ராஜகோபுரங்கள்தான். அதுவும்கூட ராஜகோபுரங்களுக்குத் தனி நபர் திருப்பணி செய்வது ஐதீகமல்ல (முடிவில், தீங்கு நேரிடக் கூடும் என நம்பப்படுகிறது) என்பதால்தான். இந்தப் பணியைத் திருச்செந்தூர், பழனி போன்ற பெரிய கோவில்களை ஏற்கச் செய்துவிடலாம். இது வழக்கமும்கூட” என்றார் அவர்.

“ஏதோ அரசு மாறியதும் திருப்பணிக் குழுவைக் கலைத்துவிட்டார்கள். தமது வேண்டுகோளின் பேரில் திருத்தப்பட்ட 72 பேர் கொண்ட அந்தக் குழுவில் உள்ளபடியே 5 பேர்தான் அரசியல் கட்சி சார்ந்தவர்கள்" என்றும் தெரிவித்தார் அவர்.

“அம்பாளின் திருப்பணியை யார் நடத்தினால் என்ன? அதது காலாகாலத்தில் நடந்தேற வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம், வேண்டுதல் எல்லாமும்” என்றார் நிறைவாக பழனிவேல்ராஜன்.

கும்பாபிஷேகத் திருப்பணிகள் எந்த மட்டில்தான் இருக்கின்றன என்பதை அறிவதற்காக, முடிவாக, மீனாட்சியம்மன் கோவில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான எஸ். கனகய்யாவைச் சந்தித்தபோது வழக்கமான அரசு அதிகாரி போலல்லாமல், திருக்கோவில் நுட்பங்களை நன்கறிந்த அம்மனின் பக்தராகப் பேசினார் அவர்.

“பழையன எப்படியோ, திருப்பணிகள் துரிதமாகத் தொடங்கிவிட்டன. எப்படியும் 1995-ல் கும்பாபிஷேகத்தை நடத்திவிடுவது என்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம். அப்புறம் அம்பாள் திருவுள்ளம்” என்றார் கனகய்யா.

“திருப்பணி வேலைக்கான உத்தேச மதிப்பீடு ரூபாய் 2 கோடி. இவற்றில் தெற்கு ராஜகோபுரத்தில் கலச வேலைதான் பாக்கி. மேற்கு ராஜகோபுரமும் நிறைவடைந்தது போலத்தான்” என்றார் அவர்.

குழம்பாடல் போன்ற நுட்பமான சுதைச் சிற்ப வேலைகளை விவரித்த அவர், "வடக்கு ராஜகோபுரப் பணிக்காக நகரத்தார் சமுதாயத்தினருடன் பேசி வருகிறோம் (இன்றும் மொட்டைக் கோபுரம் என்றழைக்கப்படுகின்ற இந்தக் கோபுரத்தை ஒரு காலத்தில் நகரத்தார்கள்தான் கட்டி முடித்தார்கள்) கிழக்கு ராஜகோபுரத் திருப்பணியை மக்கள் நன்கொடையிலிருந்து கோவில் நிர்வாகமே செய்வது எனத் தாற்காலிகமாக முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

“கிழக்குப் புறத்தில் 7 நிலைகள் கொண்ட (ராஜகோபுரங்கள் அனைத்தும் 9 நிலைகள்) அம்மன் கோபுரத் திருப்பணி, தொழிலதிபர் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா நன்கொடையில் தொடங்கிவிட்டது. ஐந்து நிலைகள் கொண்ட மேற்கு அம்மன் கோபுரத்துக்கு அம்பிகா ஜூவல்லர்ஸும், கிழக்கு சுவாமி கோபுரத்திற்கு தருமபுரம் ஆதிமூலமும் முக்குறுணிப் பிள்ளையார் அருகிலுள்ள சுவாமி கோபுரத்துக்கு அறங்காவலர்களில் ஒருவரான கண்ணப்பன் செட்டியாரும் திருப்பணி செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

மற்றுமுள்ள நான்கு கோபுரங்களுக்கும் சுவாமி, அம்பாள் தங்க விமானங்களுக்குமான திருப்பணிகள் குறித்துப் பேசப்பட்டு வருகிறது. விரைவில் முடிவு செய்யப்பட்டுவிடும். வயரிங் குறித்து பிர்லா குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளோம். மற்ற வேலைகளுக்கும் மதிப்பீடுகள் தயார். சிலவற்றுக்கு டெண்டர் கோரியுள்ளோம்" என்ற அவர், அம்மையின் அருட்பணிக்காக நன்கொடையாளர்களை வரவேற்பதாகவும் வேண்டுகோள் விடுத்தார்.

“எப்படியும் பாருங்கள். இன்னும் இரண்டே மாதங்களில் எல்லாக் கோபுரங்களிலும் சாரங்கள் (தட்டி மறைப்பு) கட்டப்படும். திருப்பணிகள் தொடங்கிவிடும்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் கனகய்யா.

புராண, இதிகாச காலங்களிலெல்லாம் எது எதற்கோ, தெய்வங்களும், தேவர்களும் அசுரர்களும் தவமிருந்தார்கள் என்பார்கள். இன்று திருப்பணிக்காகவும் கும்பாபிஷேகத்துக்காகவும்கூட தெய்வங்கள் தவமிருக்க வேண்டியிருக்கிறது!

*

பழனிவேல் ராஜனும் கனகய்யாவும் சொன்னபடியே அடுத்த ஆண்டில் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. நேர்காணல்களில் கருத்துத் தெரிவித்த அனைவரும் 1963, 1974, 1995-களில் நடந்த மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகங்களில் நேரடித் தொடர்புடையோர். இவர்களில் கி. பழநியப்பனார், லெ. நாராயணன் செட்டியார், பிடிஆர் பழனிவேல் ராஜன் ஆகியோர் இப்போது இல்லை. இணை ஆணையராக இருந்த கனகய்யா பணி நிறைவுக்குப் பின் ஓய்வில் இருக்கிறார்.

இந்த நேர்காணல்களில் லெ. நாராயணன் செட்டியார் தெரிவித்திருக்கும் ஒரு கருத்து எல்லாக் காலத்துக்குப் பொருத்தமானது – “பக்தர்களால் உண்டியலில் போடப்படும் பணமும் பொருளும் கோவில் பராமரிப்புக்காகத்தான். 12 ஆண்டுகளில் திரளும் பணமே கும்பாபிஷேகத்துக்குப் போதுமானது. யாரையும் எதிர்பார்க்க வேண்டாம். உண்டியல் பணத்தை அங்கு இங்கு என டெபாசிட் செய்வதையும், பிற இனங்களுக்கு வழங்குவதையும் விடுத்து கோவிலைப் பராமரித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்”.

summary

From the Dinamani archives: A news article regarding the 1995 Meenakshi Amman Temple consecration ceremony, which was delayed due to political reasons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments