FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கட்டுரைகள்

பசிப்பிணி போக்கி அருளும் தலம் திருசோற்றுத்துறை

அருளாளர் என்ற சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார்.

Updated On : 29 டிசம்பர் 2016, 4:41 pm IST
பகிர்:

காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 13-வது தலமாக விளங்கும் திருசோற்றுத்துறை,  பசிப்பணி போக்கும் தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது.

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர். முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் உள்ளது. இந்த வாயிலுக்கு நேரே உட்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் உள்ளது. இந்த வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடிமரம் இல்லை. கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன.

Advertisement

Advertisement

வெளிப் பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை எழுந்தருளியுள்ளாள்.  அம்பாளுக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு.

இரண்டாவது நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தால் அடுத்துள்ள பெரிய மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை உள்ளது. இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து,  அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. இத்தலத்திற்குச் சிறப்பு தரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக லிங்க உருவில் அருட்காட்சி தருகிறார். தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருத்தும் இறைவன் கருவறை பகுதிக்குச் செல்ல வழி உள்ளது.

தல வரலாறு

ஒரு முறை திருச்சோற்றுத்துறை இருந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், இப்படி மக்களை பசியில் தவிக்க விடுவது நியாயமா என்று முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் ‘அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு’ என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு அன்னமிட்டு அவர்களின் பசி தீர்த்தார். இவ்வாறு இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும் அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது.

தலச் சிறப்பு

இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப் பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு.  காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலம் என்ற பெருமை இத்தலத்திற்குண்டு. சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் திருவையாற்றின் சப்தஸ்நான தலங்களில் ஒன்றாகும். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு  திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது. பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம்.

எப்படிப் போவது?

தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது.. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

- என்.எஸ். நாராயணசாமி

ஆலய முகவரி

அருள்மிகு ஓதவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை
திருச்சோற்றுத்துறை அஞ்சல் (வழி) கண்டியூர்
திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம் - PIN - 613202

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலய தொடர்புக்கு: மனோகரன் / கண்ணன். கைபேசி: 9943884377

திருநாவுக்கரசரின் தேவாரம் - பாடியவர் சுந்தர் ஓதுவார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments