முகப்பு
செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம்.

Updated On : 21 ஜூன் 2026, 10:19 am IST
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம் - படம்: தினமணி
பகிர்:

சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வா வா நடராஜரே, வந்துவிடு நடராஜா என முழக்கமிட்டு வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை திங்கள்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.

வீதிவலம் வந்த 5 தேர்கள்: ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. ஜூன் 21 ஆம் தேதி 9-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.

Advertisement

Advertisement

தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழவீதியில் உள்ள இன்று மாலை தேர்நிலையை அடைகின்றன.

உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை: தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம். பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். சிவனடியார்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடி சென்றனர்.

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம் - படம்: தினமணி

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர் அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

நாளை மகாபிஷேகம், ஆனித்திருமஞ்சன தரிசனம்: நாளை ஜூன் ஆம் 22 ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.

பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடணமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர்.

வரும் ஜூன் 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடைபெறுகிறது. உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஜெ.ஜெயசூர்யா தீட்சிதர், துணைச்செயலாளர் ஏ.கணபதி, சுப்பிரமணிய தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் சி.ந. ராஜூ தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் வி.சிவானந்தம், கே.அம்பேத்கர் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார், நகராட்சி ஆணையர் த. மல்லிகா ஆகியோர் செய்திருந்தனர். போலீஸாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

summary

Aani Thirumanjanam festival at the Chidambaram Sri Natarajar Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.