FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அயோத்திக்குச் செல்லாமலேயே ராம தரிசனம்... தென்னக அயோத்திக்கு வாங்க!

ராமபிரான் பட்டாபிஷேகத்தில் காட்சித்தரும் திருக்கோயில் பற்றி..

18 செப்டம்பர் 2026, 5:08 pm IST
தென்னக அயோத்தி
பகிர்:

ராமபிரான் அவதரித்த அயோத்தியை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும் என்பது ராம பக்தர்களின் கனவு. அதற்கான காலச்சூழல் அமையப்பெறாதவர்கள் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. இத்திருக்கோயிலில் உள்ள ராமரை வணங்குவதன் மூலம் அயோத்தி சென்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கோயிலின் சிறப்பு

கும்பகோணத்தின் மையப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுற அமைந்துள்ளது அருள்மிகு ராமசாமி திருக்கோயில். இத்திருக்கோயில் கி.பி. 1600 முதல் கி.பி. 1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் நிர்மாணிக்கப்பட்டது. மன்னர் ரகுநாத நாயக்கர் ராமபிரானின் தீவிர பக்தராக அறியப்படுகிறார்.

Advertisement

Advertisement

இத்திருத்தலத்தில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இத்திருக்காட்சியைக் காண்பதற்காகவே பக்தர்கள் இத்தலத்துக்கு வருகின்றனர். ஸ்ரீராமரும் சீதா பிராட்டியும் ஒரே பீடத்தில் அமர்ந்து சேவை தரும் காட்சி கண்கொள்ளாதது.

பரதன் குடைபிடிக்க, சத்ருகன் சாமரம் வீசுகின்றார். லட்சுமணன் ஸ்ரீ ராமரின் வில்லைத் தாங்கி நிற்கிறார். கருவறை வலப்புறத்தில் ஸ்ரீராமரையும் சீதாவையும் தரிசித்தபடி அமர்ந்திருக்கும் அனுமன் கரங்களில் வீணையும் சுவடியும் வைத்துள்ளார்.

சிற்பங்களும், ஓவியங்களும்

கருவறைக் காட்சிகள் மட்டுமல்லாது, கோயிலில் திரும்பும் இடமெல்லாம் கண்கவர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மகாமண்டபச் சிற்பங்கள் மற்றும் பிராகார ஓவியங்களைக் கண்டால் அந்த இடத்தை விட்டு வர மனம் ஒப்பாது.

காண்போரை பிரம்மிக்க வைக்கும் வகையில் மகா மண்டபத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் இருக்கும் சிற்பங்கள் காட்சியளிப்பதோடு, ஆளுயர சிற்பங்களாக அங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் உள்ள 64 தூண்களிலும் செய்யப்பட்ட திருமால் அவதாரங்கள், திருக்கல்யாணக் காட்சிகள் போன்ற சிற்ப வேலைப்பாடுகள் கலைநயத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

சிற்பங்கள் ஒருபுறம் பக்தர்களைச் சிலிர்க்க வைக்கிறது என்றால், மற்றொருபுறம் சித்திரங்கள் சிந்தையைக் கவர்கின்றன. கோயிலின் உள் பிரகாரத்தில் மூன்று வரிசைகளில், 219 சுவர் ஓவியங்களாக ராமாயணம் தீட்டப்பட்டுள்ளது. இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் ராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். சித்திர வடிவிலான இராமாயணக் காட்சிகள், நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாக அற்புத காட்சி தருகின்றன.

இத்திருத்தலத்தின் இறைவனை உண்மையான பக்தியுடன் வழிபடுவதன் மூலம் வேலை, பதவி, செல்வாக்கு பெற்றுச் சிறப்புடன் வாழமுடியும் என்பது நம்பிக்கை.

எப்படிச் செல்வது?

கும்பகோணம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் பெரிய கடை வீதியின் தென்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ராமசுவாமி கோயில்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

தினமும் காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments