‘உலக சாம்பியனுக்கே இந்த நிலைமையா’... உலகக் கோப்பை நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்!
2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் குவாலிஃபையரில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பற்றி...
2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் நேரடித் தகுதிச் சுற்றை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி குவாலிஃபையரில் விளையாடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரை ஆப்பிரிக்க நாடுகளான தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் நடத்துகின்றன.
போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைத் தவிர்த்து இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றிருக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த அணிகளுடன் சேர்த்து கற்றுக்குட்டியாக இருந்து பெரிய அணிகளுக்கு சவாலளிக்கும் ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்தைத் தோற்கடித்தன் மூலம் 10-வது அணியாக உலகக்கோப்பை ரேஸில் இணைந்திருக்கிறது.
இந்த சூழலில், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் முதலிரண்டு தொடர்களான 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்த சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதியை இழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒருநாள் போட்டித் தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெறுவதற்கான காலக்கெடுவாக செப். 30 ஆம் தேதியை ஐசிசி நிர்ணயித்திருக்கிறது. இதில், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே தவிர்த்து முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாகத் தகுதிபெறும். மீதமுள்ள நாடுகள் அடுத்தாண்டு பிப். 21 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை நடைபெறும் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடி வெற்றி பெற வேண்டும்.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 10-வது இடத்தில் இருந்தது. ஐசிசி நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் இருந்தன. ஆனால், அதற்கு முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதால், அந்த அணி நேரடியாகத் தகுதி பெற்றது.
இரண்டு முறை உலக சாம்பியனாக இருந்தாலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிச் சுற்றில் ஆடுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக, 2017 ஆம் ஆண்டு செப். 30 ஆம் தேதிக்குள்ளாக ஐசிசி தரவரிசையில் முதல் எட்டு இடங்களை எட்டாததால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 2019 உலகக் கோப்பைக்கான நேரடித் தகுதி வாய்ப்பையும் இழந்தது.
இதனால், 2018 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிக்காக ஜிம்பாப்வேவில் விளையாடி, மீண்டு வந்து சூப்பர் சிக்ஸில் விளையாடி தகுதி பெற்றிருந்தது, அதுமட்டுமின்றி, கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதி பெறவே இல்லை.
The two-time champions must now battle through the World Cup Qualifiers to book their place in the 2027 ODI World Cup.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.