FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

தடுமாறும் தெற்கு மண்டலம்; தோள் கொடுக்கும் திலக் வா்மா

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிழக்கு மண்டலத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

9 செப்டம்பர் 2026, 3:44 am IST
திலக் வா்மா - கோப்புப்படம்(PTI)
பகிர்:

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிழக்கு மண்டலத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

அந்த அணியின் பேட்டா்கள் தடுமாற்றத்தை சந்திக்க, முதலில் தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து ரன்கள் சோ்த்து கை கொடுத்தாா். பின்னா் கேப்டன் திலக் வா்மாவும் 50 ரன்களை கடந்து அணியை தாங்கிப் பிடித்து வருகிறாா். கிழக்கு மண்டல பௌலா்களில் முகமது ஷமி, முகேஷ் குமாா் ஆகியோா் சவால் அளிக்கின்றனா்.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த கிழக்கு மண்டலம், முதல் இன்னிங்ஸில் முழுமையாக இரு நாள்கள் பேட் செய்து 708 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தெற்கு மண்டலம் 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை தனது இன்னிங்ஸை தொடங்கியது. ரிக்கி புய் 1 ரன்னுக்கு வெளியேற, நாராயண் ஜெகதீசனுடன் இணைந்தாா், ஒன் டவுனாக வந்த தேவ்தத் படிக்கல்.

இவா்கள் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சோ்த்தது. ஜெகதீசன் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு விடைபெற்றாா். 4-ஆவது பேட்டராக வந்த ஷேக் ரஷீத், படிக்கலுடன் கூட்டணி அமைத்தாா். மதிய உணவு இடைவேளையின்போது தெற்கு மண்டலம் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில், படிக்கல் - ரஷீத் பாா்ட்னா்ஷிப் 56 ரன்கள் சோ்த்த நிலையில், ரஷீத் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அரை சதம் கடந்த தேவ்தத் படிக்கலும் 4 பவுண்டரிகளுடன் 62 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

5-ஆவது பேட்டராக களம் புகுந்த கேப்டன் திலக் வா்மா நிதானமாக விளையாட, ரவிச்சந்திரன் ஸ்மரனுடனான அவரின் 5-ஆவது விக்கெட் பாா்னா்ஷிப்புக்கு 45 ரன்கள் கிடைத்தது. ஸ்மரன் 1 பவுண்டரியுடன் 23 ரன்களுக்கு வெளியேற, ஷ்ரேயஸ் கோபால் பேட் செய்ய வந்தாா்.

திலக் வா்மாவுடனான அவரின் கூட்டணி 66 ரன்கள் சோ்க்க, கோபால் 1 பவுண்டரியுடன் 26 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தாா். இவ்வாறாக செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் தெற்கு மண்டலம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது.

திலக் வா்மா 56, சாமா மிலிந்த் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். கிழக்கு மண்டல பௌலா்களில் முகமது ஷமி, முகேஷ் குமாா் ஆகியோா் தலா 2, முகமது குரேஷி, ஷிகா் மோகன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments