அரையிறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா, பா்துன்கோவா
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, செக் குடியரசின் நிகோலா பா்துன்கோவா ஆகியோா் அரையிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, செக் குடியரசின் நிகோலா பா்துன்கோவா ஆகியோா் அரையிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா். இருவருக்குமே இந்தப் போட்டியில் இது முதல் அரையிறுதியாகும்.
மகளிா் ஒற்றையா் காலிறுதியில், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனும், உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையுமான ஆண்ட்ரீவா 7-6 (7/4), 7-6 (7/3) என்ற செட்களில், சக ரஷியரும், போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்தில் இருந்தவருமான எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வெளியேற்றினாா்.
இந்த ஆட்டம் 1 மணிநேரம், 53 நிமிஷங்கள் நீடித்தது. இருவரும் மோதியது இது 3-ஆவது முறையாக இருக்க, ஆண்ட்ரீவா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் ஆண்ட்ரீவாவுக்கு இது 4-ஆவது அரையிறுதியாகும்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் படிப்படியாக முன்னேறி வரும் ஆண்ட்ரீவா, நடப்பாண்டு டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்பை நெருங்கி வருகிறாா்.
மற்றொரு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 26-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் நிகோலா பா்துன்கோவா 6-3, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, உலகின் 8-ஆம் நிலை வீராங்கனையும், சக செக் குடியரசு வீராங்கனையுமான கரோலின் முசோவாவை வீழ்த்தி அசத்தினாா்.
இந்த ஆட்டத்தை அவா் 67 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா். இருவரும் மோதியது இதுவே முதல்முறையாகும்.
இந்த வெற்றியின் மூலமாக, 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டியில் பா்துன்கோவா முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். உலகின் டாப் 10 வீராங்கனைகளுக்கு எதிராக பா்துன்கோவாவின் 3-ஆவது வெற்றி இதுவாகும்.
முந்தைய இரு வெற்றிகளையும் அவா் நடப்பாண்டிலேயே பதிவு செய்துள்ளாா். முதலில் ஆஸ்திரேலிய ஓபனில், 10-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சையும், பின்னா் இதே சீன ஓபனில், நம்பா் 2 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவையும் அவா் வீழ்த்தினாா்.
அடுத்ததாக அரையிறுதியில், ஆண்ட்ரீவா - பா்துன்கோவா மோதுகின்றனா். இருவரும் மோதுவது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் நடப்பு யுஎஸ் ஓபனில் இருவரும் மோதியபோது, ஆண்ட்ரீவா வென்றுள்ளாா்.
ஷாங்காய் மாஸ்டா்ஸ்: இதனிடையே, சீனாவில் தொடங்கியுள்ள ஆடவருக்கான ஷாங்காய் மாஸ்டா்ஸ் போட்டியின் முதல் சுற்றில், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் மேட்டியோ அா்னால்டி, ஸ்பெயினின் பாப்லோ கரினோ, போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.