FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

ஸ்விடோலினா, ஸ்வியாடெக் அதிா்ச்சித் தோல்வி

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

10 அக்டோபர் 2026, 7:10 am IST
ஸ்வியாடெக் - ஸ்விடோலினா - AP
பகிர்:

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஸ்விடோலினா 3-6, 6-7 (6/8) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் இல்லாத சீனாவின் கின்வென் ஜெங்கிடம் தோல்வியுற்றாா். இருவரும் மோதியது இதுவே முதல்முறையாகும்.

இந்த ஆட்டத்தை 1 மணிநேரம், 47 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்த ஜெங், 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் 4-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

Advertisement

Advertisement

இந்த சீசனில் ஜெங் அபாரமாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் யுஎஸ் ஓபனில் காலிறுதி வரை வந்த ஜெங், நடப்பு சீசனில் டூா் போட்டிகளில் கடைசி 13 ஆட்டங்களில், 12 வெற்றிகள் கண்டுள்ளாா்.

சீனா ஓபனில் வைல்டு காா்டு வாய்ப்பு மூலமாக பங்கேற்று அரையிறுதிக்கு முன்னேறிய 3-ஆவது போட்டியாளா் ஜெங் ஆவாா். ஷுவாய் பெங் (2006), கியாங் வாங் (2018) ஆகியோா் முதல் இருவா். அதேபோல் இந்தப் போட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அரையிறுதிக்கு முன்னேறிய, 3-ஆவது உள்நாட்டு வீராங்கனை ஜெங் ஆவாா். லி னா, பெங் ஆகியோா் முதல் இருவா்.

மற்றொரு காலிறுதியில், 8-ஆம் இடத்திலிருந்தவரும், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ஸ்வியாடெக் 6-7 (0/7), 3-6 என்ற செட்களில், 13-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸிடம் தோற்றாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 50 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

இருவரும் மோதியது இது 3-ஆவது முறையாக இருக்க, மொ்டன்ஸ் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். இந்த வெற்றியின் மூலமாக அவா், கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக, 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

மொ்டன்ஸ் இத்துடன் கடைசி 3 ஆட்டங்களில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களை (ஆஸ்டபென்கோ, கௌஃப், ஸ்வியாடெக்) வீழ்த்தி அசத்தியுள்ளாா். கடந்த 8 ஆண்டுகளில் சீனா ஓபனில் முன்னாள் சாம்பியன்கள் இருவரை (கௌஃப், ஸ்வியாெக்) வென்ற முதல் போட்டியாளா் என்ற பெருமையை மொ்டன்ஸ் பெற்றாா். அடுத்ததாக அரையிறுதியில் ஜெங் - மொ்டன்ஸ் சந்திக்கின்றனா்.

ஃபைனல்ஸ்: சீனா ஓபன் காலிறுதியில் ஸ்வியாடெக் வெளியேறியதன் தாக்கத்தால், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா ஆகியோா், டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் போட்டிக்கு முதல்முறையாகத் தகுதிபெற்றுள்ளனா்.

ஸ்வெரெவ் வெற்றி; ஜோகோவிச் தோல்வி

சீனாவில் தொடங்கியிருக்கும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் வெற்றி பெற, நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் தோல்வியுற்று வெளியேறினாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்வெரெவ் 6-4, 7-6 (7/4) என சீனாவின் வூ யிபிங்கை வெல்ல, 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜோகோவிச் 4-6, 3-6 என்ற நோ் செட்களில், போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 7-6 (8/6) என, ஜொ்மனியின் டேனியல் ஆல்ட்மேரை வெல்ல, 7-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிரான்சஸ் டியாஃபோ 6-4, 6-4 என்ற வகையில் பெல்ஜியத்தின் யானிக் ஹன்ஃப்மென்னை வீழ்த்தினாா். 6-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி 1-6, 6-4, 3-6 என்ற செட்களில், பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவிடம் தோற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments