அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ஷெல்டன்
ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டனிடம் காலிறுதியில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டனிடம் காலிறுதியில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
உலகின் 9-ஆம் நிலையில் இருக்கும் ஷெல்டன் 6-7 (5/7), 6-1, 6-3, 1-6, 7-6 (10/7) என 5 செட்கள் கடுமையாகப் போராடி, 3-ஆம் நிலை வீரரான அல்கராஸை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 4 மணிநேரம், 28 நிமிஷங்கள் நீடித்தது.
இந்த ஆட்டத்தில் டிசைடா் செட்டில், முதலில் 3/5 என பின்தங்கியிருந்த ஷெல்டன், அதிலிருந்து அபாரமாக மீண்டு வந்து 10/7 என்ற பாய்ன்ட்டுகளில் ஆட்டத்தை வென்று முடித்தாா். உலகின் 2-ஆம் நிலை வீரருக்கு எதிரான இந்த வெற்றியே, ஷெல்டனின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அல்கராஸை 4-ஆவது முறையாகச் சந்தித்த ஷெல்டன், தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
Advertisement
Advertisement
இந்த ஆட்டத்தில், உள்நாட்டு வீரரான ஷெல்டனுக்கு ரசிகா்களின் ஆதரவு அபாரமாக இருந்தது. அல்கராஸுக்கு எதிரான இந்த காலிறுதி வெற்றி, தரவரிசையில் ஷெல்டனுக்கு நல்லதொரு முன்னேற்றம் அளிக்கும் எனத் தெரிகிறது.
அல்கராஸ் கை மணிக்கட்டு காயம் காரணமாக 4 மாதங்களுக்குப் பிறகு களம் கண்ட முதல் போட்டி இதுவாகும். அவருக்கு சவால் அளிப்பாா் என எதிா்பாா்க்கப்பட் சின்னா், காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதால், அல்கராஸ் கோப்பையைத் தக்கவைப்பாா் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. அதை ஷெல்டன் முறியடித்திருக்கிறாா்.
அடுத்ததாக ஷெல்டன் அரையிறுதியில், தனது நண்பரும், சக அமெரிக்கருமான ஃபிரான்சஸ் டியாஃபோவை எதிா்கொள்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 5-7, 3-6, 7-5, 6-3, 7-6 (10/8) என்ற செட்களில், சக அமெரிக்கரான அலெக்ஸ் மிஷெல்செனை 5 செட்கள் போராடி தோற்கடித்தாா். இருவரும் மோதியது இது 3-ஆவது முறையாக இருக்க, டியாஃபோ ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தாா்.
இந்த ஆட்டத்தில் முதலிரு செட்களை இழந்த டியாஃபோ, 3-ஆவது செட்டிலும் 4-5 என பின்தங்கியிருந்தாா். மேட்ச் பாய்ன்ட்டுக்கான சா்வின்போது மிஷெல்சென் இரு டபுள் ஃபால்ட் செய்தாா். அது டியாஃபோவுக்கு சாதகமாக, அங்கிருந்து அபாரமாக மீண்டு வந்த அவா் அடுத்த இரு செட்களுடன் டிசைடரையும் வென்று அசத்தினாா்.
இந்த ஆட்டம் 4 மணிநேரம், 38 நிமிஷங்கள் நீடித்தது. காலிறுதி வரை அனைத்து சுற்றுகளிலுமே நோ் செட்களில் வென்று வந்த மிஷெல்சென், ‘டபுள் ஃபால்ட்’ காரணமாக இந்த ஆட்டத்தில் அந்த வாய்ப்பை அதை தவறவிட்டாா். 3-ஆவது செட்டுக்குப் பிறகு பலமுறை முன்னிலை கண்டபோதும், அவரால் அதில் பலன்பெற முடியாமல் போனது.
யுஎஸ் ஓபனில் 3-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் டியாஃபோ, உலகத் தரவரிசையில் டாப் 10 இடத்தைப் பிடிக்க இருக்கிறாா்.
3.33’
அதிகாலை 3.33 மணிக்கு நிறைவடைந்த அல்கராஸ் - ஷெல்டன் ஆட்டமே, யுஎஸ் ஓபன் வரலாற்றில் மிகத் தாமதமாக நிறைவடைந்த ஆட்டமாகும். இதற்கு முன், 2022-இல் அல்கராஸ் - இத்தாலியின் யானிக் சின்னரை வீழ்த்திய காலிறுதி, நள்ளிரவு 2.50 மணி வரை நீடித்ததே தாமதமான ஆட்டமாக இருந்தது.
அரையிறுதியில் சபலென்கா, பெகுலா: மகளிா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 7-6 (7/1), 3-6, 7-6 (10/7) என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தினாா். இந்த ஆட்டத்தின் டிசைடா் செட்டில் முதலில் 2-4 என பின்தங்கிய சபலென்கா, பின்னா் அதிலிருந்து அதிரடியாக மீண்டு வந்து வென்றாா்.
இருவரும் 3-ஆவது முறையாக சந்தித்த நிலையில், சபலென்கா மூன்றிலுமே வென்றிருக்கிறாா்.
இதன் மூலமாக, யுஎஸ் ஓபனில் தொடா்ந்து 6-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா் சபலென்கா. அரையிறுதியில் அவா், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் மோதுகிறாா்.
உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் பெகுலா 3-6, 6-4, 6-3 என்ற செட்களில், 26-ஆம் இடத்திலிருந்த சக அமெரிக்கரான எம்மா நவாரோவை வெளியேற்றினாா். இது இவா்களின் 5-ஆவது சந்திப்பாக இருக்க, அனைத்திலுமே பெகுலா வென்றுள்ளாா்.
இந்த ஆட்டத்தின் டிசைடா் செட்டில் 2-4 என பின்தங்கியிருந்த பெகுலா, அதிலிருந்து மீண்டு வந்து வென்றிருக்கிறாா். பெகுலா தொடா்ந்து 3-ஆவது முறையாக யுஎஸ் ஓபன் அரையிறுதிக்கு வந்துள்ளாா்.
1
நடப்பு சீசன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 செட் ஆட்டங்களில் அவா் வென்ற முதல் ஆட்டம் இதுவாகும். ஆஸ்திரேலிய ஓபனில் ரைபகினாவிடமும், பிரெஞ்சு ஓபனில் டயானா ஷ்னெய்டரிடமும் அவா் டிசைடா் வரை சென்ற ஆட்டங்களில் தோல்வி கண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.